

தோல்வி பயம் காரணமாக கருணாநிதியின் உடல்நிலையைக் கூறி அனுதாப வாக்குகள் பெற திமுக முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக சிறுபான்மை பிரிவுச் செயலாளருமான அன்வர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.அர்ச்சுணனை ஆதரித்து நேற்று முன்தினம் பிரச்சாரம் கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பிடித்து வெற்றி பெற்று, திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை துடைத்தெறியும். தோல்வி பயத்தில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து வாக்காளர்கள் மத்தியில் திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன்மூலமாக அனுதாப வாக்குகள் பெற முயற்சிக்கின்றனர்.
ஆனால், திமுகவின் பொய் பிரச்சாரத்தை வாக்காளர்கள் நம்பமாட்டார்கள். தோல்வி பயத்தால், அதிமுக மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை திமுகவினர் முன்வைக்கின்றனர். இதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
திமுகவால் தீர்வு காண முடியாத காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளில் அதிமுக ஆட்சியில் தீர்வு காணப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி தொடர்ந்தால், படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்.
மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, இலவச திட்டங்களை அறிவிக்கவில்லை. ஏழை மக்களும், உயர்தட்டு மக்களும் சமநிலையை அடைவதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.