

கோவை: ஐஏஎஸ் அதிகாரிகள், துறை செயலாளர்களை மாற்றுவதால் எந்தப் பலனும் இல்லை. அதற்குப் பதிலாக அமைச்சர்களை மாற்றுங்கள் என்று திமுகவுக்கு அறிவுரை கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கோவை பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இனி மாதந்தோறும் திமுக அமைச்சர்கள் பற்றிய ஊழல் பட்டியல் வெளியிடப்படும். இதுவரை நியூட்ரிசன் கிட் டெண்டரை ஏன் திறக்காமல் இருக்கிறார்கள் என்பதற்கு அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக அரசு அவசர அவசரமாக துறை செயலாளர்களை மாற்றுகிறது. ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றுவதைவிட அமைச்சர்களை மாற்றலாம். அப்படிச் செய்தாலாவது ஏதாவது பலன் கிடைக்கும்" என்றார்.
காவல்துறையில் ஆளுங்கட்சி தலையீடு: தொடர்ந்து பேசிய அவர், "தமிழக காவல்துறையில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக இருக்கிறது. அதுபோல் 2 நாட்களில் 2 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளன. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து 7 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளன. காவல்துறை தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் முதல்வர் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், டிஜிபி, காவல் ஆணையர்கள் தான் விளக்கம் அளிக்கின்றனர். அது ஏற்புடையது அல்ல. சாத்தான்குளம் லாக் அப் மரணத்தை வைத்து திமுக அரசியல் செய்தது. ஆனால், இப்போது நிகழ்ந்துள்ளதை நாங்கள் அரசியலாக்கவில்லை. தவறை தட்டிக் கேட்கிறோம். சிறையில் கைதிகள் மரணங்கள், அன்றாடம் நிகழும் கொலைகள், கூட்டு பாலியல் வன்கொடுமைகள் ஆகியன காவல்துறையின் செயலின்மையையே காட்டுகிறது. தமிழக காவல்துறை பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறது. அதை நடத்தியது திமுகவின் ஒன்றிய செயலாளர்கள் தான். அவர்கள் தான் பாம்பாட்டிகள் போல் ஆட்டிப்படைக்கின்றனர். இதில் சரி செய்யப்பட வேண்டியது திமுகவின் அரசியல் தலையீடு தான்" என்றார்.
பணிச்சுமை குறைக்கப்படுமா? காவலர்களின் பனிச்சுமை பற்றி பேசிய அவர், "காவல் துறைக்காக ஓர் ஆணையத்தை அமைக்கிறோம் என்று முதல்வர் கூறினார். சொன்னபடி அமைக்கவும் செய்தார். ஆனால் அந்த ஆணையத்தின் தலைமையாக நியமிக்கப்பட்ட ஓய்வு நீதிபதியுடைய பாதுகாப்பு காவலரையே சாலையில் வெட்டிக் கொலை செய்தனர். அதன்பிறகு அந்த ஆணையத்தின் நிலைமை என்னவானது?.
காவல்துறையினருடைய பணிச் சுமையைக் குறைப்பதற்கு இந்த அரசு என்னவிதமான திட்டங்களை கையில் எடுத்திருக்கிறது. சில நேரங்களில் காவல்துறையினரே தவறு செய்கிறார்கள். சில வேளைகளில் அரசியல் தலையீடு காரணமாக தவறு செய்கிறார்கள். இன்னும் சில நேரங்களில் பணிச்சுமையால் தவறு செய்கின்றனர். காவல்துறையினர் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. இந்த மன உளைச்சலைப் போக்க அரசு என்ன செய்யப்போகிறது" என்று பேசினார்.