Published : 14 Jun 2022 06:44 AM
Last Updated : 14 Jun 2022 06:44 AM

கண்புரை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தை கண்புரை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் காசநோய், கண்புரை சிகிச்சைமற்றும் கரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வுக் கூட்டம், காணொலி வாயிலாக நேற்று நடந்தது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருந்து இதில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 5.78 கோடி ஆகும். இதில் 94.31 சதவீதம்பேருக்கு முதல் தவணையும், 84.82 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 30 மெகா கரோனாதடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் மொத்தம் 4.44 கோடி பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி நடந்த 30-வதுமெகா முகாமில் 13.90 லட்சம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.

தமிழகத்தில் காசநோயை கண்டறிவதற்காக 18 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். கண்புரை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றத் தேவையான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவையான அனைவருக்கும் கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது. கரோனா தடுப்பூசி மற்றும் இதர சுகாதார சேவைகளுக்கு தமிழக அரசுக்கு, மத்திய அரசு அளித்து வரும்ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மருத்துவ சேவைக் கழக இயக்குநர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x