

சென்னை: சென்னை அடுத்த செங்குன்றம் அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்ற அப்பு(31). இவர்மீது, மணலி புதுநகர், வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், திருநின்றவூர், சோழவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், திருட்டு, வழிப்பறி, கொள்ளை தொடர்பாக 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கொடுங்கையூரில் அண்மையில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக ராஜசேகரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது ராஜசேகருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், போலீஸார் ராஜசேகரை அடித்துக் கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் டி.எஸ்.அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், கொடுங்கையூர் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலைக் காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.
மாஜிஸ்திரேட் விசாரணை
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில், கெல்லீஸ் சிறார் 12-வது நீதித்துறை நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி நேற்றுகாலை விசாரணை மேற்கொண்டார். அப்போது, கொடுங்கையூர் எவரிடி காலனி அருகேயுள்ள புறக்காவல் நிலையத்தில் ராஜசேகர் மயங்கி விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாஜிஸ்திரேட் லட்சுமி அங்கும் சென்று, அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின்போது, தனது மகன் ராஜசேகருக்கு வலிப்பு நோய் கிடையாது, அவரை 2 நாட்கள் விசாரணை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்தி, அடித்துக் கொன்றுவிட்டதாக ராஜசேகரின் தாய் உஷாராணி தெரிவித்தாராம்.
பின்னர், மாஜிஸ்திரேட் லட்சுமி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவரது முன்னையில் ராஜசேகரின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ராஜசேகர் உயிரிழப்பு தொடர்பாக இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செம்பியம் காவல் சரக உதவி ஆணையர் செம்பேடு பாபு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமை ஆணையம்
இதற்கிடையில், ராஜசேகர் உயிரிழப்பு தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன், ‘‘விசாரணைக் கைதி உயிரிழப்பு தொடர்பாக, சென்னை மாநகரகாவல் ஆணையர் 4 வாரங்களுக்குள் பதில் அளித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.