

சென்னை: புதுச்சேரி மாநில ஆளுநராகப் பதவி வகித்த கிரண்பேடி, தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட பணிகளை ‘ஃபியர்லெஸ் கவர்னன்ஸ்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதியுள்ளார். இது ‘அச்சமற்ற ஆட்சி’ என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
புத்தகத்தை வெளியிட்டு கிரண்பேடி பேசியதாவது: நான் புதுச்சேரி ஆளுநராகப் பொறுப்பேற்றபோது, அம்மாநிலம் துாய்மையின்றி இருந்தது. குறிப்பாக, நீர்நிலைகள் துார்வாரப்படாமல், புதர்மண்டிக் கிடந்தன.இதனால், நிலத்தடி நீர் குறைந்து, தண்ணீர்ப் பற்றாக்குறை சூழல் உருவானது.
இதையடுத்து, அவற்றை சுத்தம்செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டேன். பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்று, நேரடியாக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு, பணிகள் நடந்தன. இதனால், துார்வாரும் பணிகளில் ஊழல் நடக்காமல் தடுக்கப்பட்டது. அத்துடன், புதுச்சேரியில் 3 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 7 அடியாக அதிகரித்தது.
ஐந்து ஆண்டு காலம் சிறப்பாகப் பணியாற்றியதற்கு எனது களப்பணி முக்கியக் காரணமாக அமைந்தது. எனவே, ஒவ்வொரு அதிகாரியும் தினமும் கள ஆய்விலிருந்து பணியைத்தொடங்க வேண்டும். நான் செய்தபணிகள் முழுவதும் ஆவணப்படுத்தப்பட்டு, தற்போது புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கிரண்பேடியின் செயலராகப் பணியாற்றிய, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவநீதிதாஸ், ‘‘கிரண்பேடி புதுச்சேரி ஆளுநராக இருந்தகாலத்தில், சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டார். சட்டத்தை மீறி அவர்எந்த செயலையும் செய்யவில்லை. நியமன எம்எல்ஏ-க்கள் 3 பேர் நியமிக்கப்பட்டதும், சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான்’’ என்றார்.
புத்தகத்தின் முதல் பிரதியை, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வேந்தர்மரியஜீனா ஜான்சன் பெற்றுக்கொண்டார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு (ஃபிக்கி) சென்னை தலைவர் பிரசன்னா வசனாடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.