Published : 03 May 2016 09:04 AM
Last Updated : 03 May 2016 09:04 AM

கோபுரமும், குடிசைகளும் நிறைந்த தொகுதி: மயிலாப்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்

கோபுரமும், குடிசைகளும் நிறைந்த சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் போட்டியிடுகிறார். காவல்துறை டிஜிபியாக காக்கி சட்டை அணிந்து லட்சக்கணக்கான காவலர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடராஜ், தற்போது வெள்ளை வேட்டி, சட்டையில் மயிலாப்பூரில் வாக்கு சேகரித்து வருகிறார். பரேடின்போது காவல்துறை ட்ரம்ஸ் வாத்தியத்தின் மரியாதையை ஏற்ற நடராஜ், தற்போது கானா ட்ரம்ஸ், அதிமுகவினரின் ஆட்டம் என வாக்கு சேகரிப்புகளை செய்து வருகிறார். பகுதி, வட்டம், கிளை என அதிமுக நிர்வாகிகள்தான் நடராஜின் வாக்குசேகரிப்பை ஒருங்கிணைக்கின்றனர்.

பசுமை வழிச்சாலை அருகே குடிசைகள் நிறைந்த கேசவரபுரத்தில் நேற்றைய தினம் நடராஜ் வாக்கு சேகரித்தார். காக்கி சீருடை அணிந்து சேவை செய்த எனக்கு வெள்ளை ஆடையில் சேவை செய்யவும் வாய்ப்பு தாருங்கள் என்கிறார் நடராஜ்.

அவரிடம் பேசியபோது, “முதல் வரின் 5 ஆண்டு சாதனைகளால் மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மீண்டும் ஜெயல லிதாவே முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மயிலாப்பூருக்கென்று சில தொலைநோக்கு திட்டங்களை வைத்துள்ளேன். குடிச்சை மாற்று வாரிய குடியிருப்புகளை சீரமைப் பது, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகேயே ரேஷன் கடைகள், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய திட்டங்கள், பசுமைவழிச் சாலையில் சுற்றுச்சூழல் பூங்கா, கூவம் ஆற்றை அழகுபடுத்துதல், சமுதாய காவல் முறை அறிமுகப் படுத்தப்படும், புகார்களை தெரி விக்க தனியாக இணையதளம் என 23 அம்சங்களை முன் வைத்து வாக்கு சேகரித்து வருகிறேன்” என்றார்.

திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள கராத்தே தியாகராஜன் சென்னை தேனாம்பேட்டை, டேங்க் லேண்ட், ஜோஹித் தோட்டம், ரங்கூன் தெரு, ஆலையம்மன் கோயில், பர்மா நகர், ஆழ்வார்ப்பேட்டை, டிடிகே சாலை ஆகிய இடங்களில் நேற்றைய தினம் வாக்கு சேகரித்தார். காலை 7 மணிக்கு வாக்குசேகரிப்பு பணியை தொடங்கிய கராத்தே தியாகராஜன், அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மதியம் 1.30 மணி வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் கூறும்போது, ‘எனக்கு மயிலாப்பூர் தொகுதி மக்களை நன்றாக தெரியும். அவர்களுக்கும் என்னை தெரியும். ஆனால், அதிமுக வேட்பாளர் நடராஜ், காவல்துறை அதிகாரியாக இருந்தபோதே மக்களை அதிகம் சந்திக்கமாட்டார். குடிசைப்பகுதி மக்களுக்கு மயிலாப்பூர் தொகுதியில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. நான் நிச்சயம் வெற்றி பெற்று அவற்றை சரிசெய்வேன்’ என்றார்.

பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் நேற்றைய தினம் வாக்கு சேகரித்தார். ‘ஊழல், மின் தட்டுப்பாடு, குடிநீர் தட்டுப்பாடு, நோய் இவையெல்லாம் வேண்டு மென்றால், இரட்டை இலைக்கும், கைக்கும் வாக்களியுங்கள் என்று அவர் பிரச்சாரம் செய்கிறார். ‘எனக்கு ஓட்டு போடாவிட்டாலும், பரவாயில்லை வீட்டை விட்டு வெளியே வாருங்கள்’ என்று வாக்காளர்களுக்கு கலகலப்பூட் டினார். 20 பேர் கூடி விட்டால், கூரை இல்லாத ஆட்டோவின் மீதேறி பிரச்சாரம் செய்கிறார் கரு.நாகராஜன்.

தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணியின் வேட்பாளர் முனவர் பாட்ஷா வாக்கு சேகரிப்புக்காக கார், ஜீப் என்று எதையும் பயன்படுத் தவில்லை. நடந்தே வாக்கு சேகரிக் கும் அவர், நேற்றைய தினம் லஸ் நவசக்தி விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினார். பல்லக்கு மாநகர், கபாலி தோட்டம், கால்வாய்க்கரை, உள்ளிட்ட குடிசைப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பாமக வேட்பாளர் சுரேஷ்குமார் சீனிவாசபுரம், லஸ், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். தமாகாவிலிருந்து விலகி மகாகவி பாரதியார் மக்கள் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியுள்ள மயிலை சத்யா மந்தைவெளி, மசூதி தெரு, அல்போன்சா கார்டன் ஆடம் தெரு உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

இவர்கள் மட்டுமன்றி, நாம் தமிழர் கட்சியின் வினோத், பகுஜன் சமாஜ் கட்சியின் பாலாஜி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x