

சென்னை: உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள எழும்பூர் ரயில் நிலையத்தில் திட்டப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. 114 ஆண்டுகள் பழமையான, அழகான கட்டமைப்புகளைக் கொண்ட நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் திகழ்கிறது.
இங்கு தினசரி 35 விரைவு ரயில்கள், 240 புறநகர் மின்சார ரயில்கள் வந்து செல்கின்றன. தினசரி சுமார் 24 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்துக்கு 2020-21-ம் நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை கையாளும் வகையில், இந்த நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, இதை உலகத் தரத்தில் மேம்படுத்த தெற்கு ரயில்வே தரப்பில் முன்மொழியப்பட்டது. இதையேற்று, ரூ.760 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையில், கடந்த மாதம் 26-ம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து டெண்டர் கோருவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மறுசீரமைப்பு பணிக்காக டெண்டர் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “மறுசீரமைப்பு பணிக்காக, இணையவழி டெண்டர் அழைப்பு ஜூன் 8-ம் தேதி கோரப்பட்டது. டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்ட தேதியிலிருந்து 14 நாட்களுக்கு பிறகு, டெண்டர் இறுதி செய்யப்படும். திட்டப்பணிகளை மேற்கொள்ள குறைவான தொகை கோருபவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்” என்றனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் 114-வது பிறந்தநாள் கடந்த 11-ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் டெண்டர் அழைப்பு கோர முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவே டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.