Published : 14 Jun 2022 06:04 AM
Last Updated : 14 Jun 2022 06:04 AM

அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு சரியான, தகுதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்: காலதாமதத்தை தவிர்க்க அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு அறிவுறுத்தல்

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். உடன் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மைப் பொறியாளர் ஆர்.விஸ்வநாத், தலைமைக் கட்டிட வடிவமைப்பாளர் எஸ்.மைக்கேல் உள்ளிட்டோர்.

சென்னை: சென்னை மண்டலத்தில் பொதுப்பணித் துறையால் பல்வேறு கட்டிடங்கள், மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: பொதுப்பணித் துறை மூலம் கட்டிடங்களை கட்டுவதில் நவீன முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். முகப்புத் தோற்றம் எழில் மிக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,

பள்ளிக் கூடங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள், மாணவ-மாணவியர் தங்கும் விடுதிகள் ஆகியவற்றின் முகப்புத் தோற்றத்தை முதல்வரே தேர்வு செய்துள்ளார். இனிமேல் கட்டப்படும் அனைத்து அலுவலகங்களும் இந்த முகப்புத் தோற்றத்துடனேயே இருக்க வேண்டும்.

எழில்மிகு தோற்றம், தரமிக்க கட்டிடம் என்பதே பொதுப்பணித் துறையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். நில எடுப்புக்கு தகுதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். சரியான இடத்தை தேர்வு செய்யாததால் பல பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோயில் நிலங்களைத் தேர்வு செய்யக்கூடாது.

வேலூர் விளையாட்டு மைதானம் வேலை இன்னும் முடியாமல் உள்ளது. செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவடையவில்லை; வரும் ஜூலை மாதத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தொற்று நோய் அவசர சிகிச்சை கட்டிட பணி, சைதாப்பேட்டை தாடண்டர் நகர், அரசு அலுவலர் குடியிருப்பு பணி ஆகியவற்றை விரைவாக முடிக்க வேண்டும் என்றார்.

இதுபோன்று பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து கட்டுமானப் பணிகள் குறித்தும் கேட்டு, ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மைப் பொறியாளர் ஆர்.விஸ்வநாத், தலைமைக் கட்டிட வடிவமைப்பாளர் எஸ்.மைக்கேல் மற்றும் சென்னை மண்டல அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x