

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தள்ளிவிட்டதாக பரவும் வீடியோ விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று என்ஆர் காங்கிரஸ் கோரியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. அப்போது அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாப்பு அதிகாரி அருகி லிருந்தவர்களை விலக்கும்போது, முதல்வர் ரங்கசாமியை தள்ளி யதாக சமூகவலைதளங்கில் ஒருவீடியோ பரவியது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பதிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து என்ஆர் காங்கிரஸ் செயலாளர் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வில்லியனூர் தேரோட்ட நிகழ்ச்சியில் முதல்வரை, அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தள்ளிவிட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காட்சி.
அங்கே கூட்டம் அதிகமாக இருந்ததால் சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் முழு வீடியோவையும் பார்த்தால் உண்மை தெரியும். எனவே என்ஆர் காங்கிரஸ் இயக்க தொண்டர்கள், நண்பர்கள் யாரும் இதை நம்பவும், பெரிதுபடுத்தவும் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் கிழக்கு மாநில துணை செயலருமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்ட தகவலில், “மாநிலத்தின் முதல் குடிமகனுக்கே இந்த நிலையென்றால், சாதாரண மக்களின் நிலையை எண்ணி வேதனைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.