

தஞ்சாவூர்: கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அதைப் பயன்படுத்தி வறண்டு காணப்படும் தஞ்சாவூர் பெரிய கோயில் அகழியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைச் சுற்றி அகழிஉள்ளது. இந்த அகழியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது, அப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, குடிநீருக்கு பயன்படுத்தப்படும். ஆனால்,தற்போது கடந்த 6 மாதங்களாக இந்த அகழி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால், கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாமல், குடிநீருக்காக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கல்லணைக் கால்வாயில்தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அதைப் பயன்படுத்தி சிவகங்கை குளத்துக்கும், அதன் தொடர்ச்சியாக கோயில் அகழிக்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: அகழியில் தண்ணீர் இருந்தால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வீடுகளில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.
தற்போது, அகழியில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதன் காரணமாக, பல வீடுகளில் ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் வெகு ஆழத்துக்குச் சென்றுவிட்டது.
தற்போது, கல்லணைக் கால்வாய் தண்ணீரை சிவகங்கை குளம், அகழி ஆகியவற்றில் நிரப்பினால், நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.