யாரிடம் எப்படி பேசுவதென விஜயகாந்துக்கு தெரியாது: சரத்குமார் குற்றச்சாட்டு

யாரிடம் எப்படி பேசுவதென விஜயகாந்துக்கு தெரியாது: சரத்குமார் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.மனோகரனை ஆதரித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் எடமலைப்பட்டி புதூரில் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும். திமுகவில் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியா அல்லது அவரது மகன் மு.க.ஸ்டாலினா என்ற குழப்பம் உள்ளது. அதை மறைப்பதற்காக அக்கட்சியினர் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்துக்கு யாரிடம், எப்படிப் பேச வேண்டும் என்பதுகூட தெரியாது என்றார்.

மீண்டும் அதிமுக ஆட்சி

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை ஆதரித்து அவர் பேசும்போது, “அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் அறிக்கை இந்திய மக்கள் அனைவரும் வியக்கும் அளவுக்கு அமைந்துள்ளது. தேர்தலில் எத்தனைபேரை கூட்டு சேர்த்துக்கொண்டு வந்தாலும் அவர்கள் அனைவரையும் எதிர்க் கும் வல்லமை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உண்டு. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்” என் றார்.

கருணாநிதி நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும்

கும்பகோணம் மடத்து தெருவில் அதிமுக வேட் பாளர் ரத்னா சேகரை ஆதரித்து சமத் துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேற்று மாலை வேன் பிரச்சாரத்தின்போது பேசியது: “திமுக தலைவர் கருணாநிதி, நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். ஆனால், ஸ்டாலின் அப்படி விரும்பவில்லை. ஏனென்றால், கருணாநிதி தொடர்ந்து முதல்வர் வேட்பாளராக நிற்பதால், தான் முதல்வராக முடியவில்லை என்ற கோபம் ஸ்டாலினுக்கு உள்ளது. ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அமைக்க இங்கு ரத்னா சேகருக்கு வாக்களியுங்கள் என்றார். பின்னர் தனக்காகவும் வாக்கு கேட்டார் சரத்குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in