Published : 06 May 2016 08:18 AM
Last Updated : 06 May 2016 08:18 AM

துணை ராணுவப் படையின் உதவியுடன் பணப் பட்டுவாடாவை தடுக்க இரவில் தீவிர கண்காணிப்பு: மத்திய தேர்தல் துணை ஆணையர் தகவல்

இரவில் பணப் பட்டுவாடாவை தடுக்க துணை ராணுவத்தின் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்வர் என மத்திய தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 6 மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர்களுடன் நேற்று மத்திய தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா மதுரையில் ஆலோசனை நடத்தினார். இதில், தேர்தல் ஆணைய இயக்குநர் ஸ்வைன், துணைச் செயலாளர் நிகில் குமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதையடுத்து தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் உமேஷ் சின்ஹா கூறியது:

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்து வசதிகளுடன் தயாராக உள்ளன. மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குக்கு பணம் வழங்கமாட்டோம் என வேட்பாளர்களிடம் உறுதிமொழி பெறப்பட்டுள்ளது. பறக்கும்படையினர் உட்பட பல்வேறு கண்காணிப்புக் குழுவினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. செலவின தேர்தல் பார்வையாளர்கள் கட்சியினர் நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர். பதற்றமான வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதிகளில் துணை ராணுவம் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்த 24 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், வாக்காளர்கள், வேட்பாளர்கள் என யார் புகார் அளித்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். பூத் சிலிப்கள் வழங்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வழங்க முடியாத சிலிப்களை தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் முறையாக ஒப்படைப்பர். இதுகுறித்த தகவல் அரசியல் கட்சியினருக்கு முறையாகத் தெரிவிக்கப்படும்.

ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக போலீஸார் மீது புகார் ஏதும் வரவில்லை. தொலைதூர கிராமங்கள் உட்பட எங்கும் இரவில் பணப் பட்டுவாடா நடக்காமல் தடுக்க துணை ராணுவம், பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். அச்சமின்றி, நேர்மையாக வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x