Published : 14 Jun 2022 06:10 AM
Last Updated : 14 Jun 2022 06:10 AM

திருச்சி | சாலையில் கிடந்த அரசு சின்னம் அச்சிட்ட ஸ்டிக்கர்கள்: இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பெட்டிகளில் ஒட்ட தயாரிக்கப்பட்டவை

திருச்சி: மத்திய, மாநில அரசுகள் சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ள நிவாரணப் பெட்டிகளில் ஒட்டுவதற்கான அரசு சின்னத்துடன் கூடிய ஸ்டிக்கர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்தன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் துன்பப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு பெருமளவில் உதவி செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பிலும் உதவும் நோக்கில் முதற்கட்டமாக 9,000 டன் அரிசி, 200 டன் ஆவின் பால்பவுடர் மற்றும் 24 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை மே18-ம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதற்கான சரக்குக் கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். அதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் இரண்டாம்கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், இலங்கைக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூட்டைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளின் மீது ஒட்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கர்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் பகுதியில் சிதறிக் கிடந்தன.

அந்த ஸ்டிக்கரில் இந்திய தேசியக்கொடி, இந்திய அரசின் சின்னம், தமிழக அரசின் சின்னம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேலும் அதில் ‘இந்திய மக்களிடமிருந்து இலங்கை மக்களுக்கு’ என்பதைக் குறிக்கும் வகையில், ‘FROM PEOPLE OF INDIA, TO PEOPLE OF SRILANKA’ என்ற ஆங்கில வாசகங்களும் அச்சிடப்பட்டிருந்தன.

ஸ்டிக்கரில் தேசியக்கொடி அச்சிடப்பட்டிருந்ததால் பொதுமக்களின் காலில் மிதிபடுவதை தவிர்ப்பதற்காக, அவ்வழியாகச் சென்ற சிலர், சாலையில் கிடந்த சில ஸ்டிக்கர்களை எடுத்து ஓரத்திலுள்ள வாய்க்கால் பகுதியில் வீசிச் சென்றனர். தகவலறிந்த மாநகர போலீஸார் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அந்த ஸ்டிக்கர்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘சிதறிக் கிடந்த அனைத்து ஸ்டிக்கர்களும் இன்னும் ஒட்டப்படாமல் பசையுடன் இருந்தன. எனவே இவற்றை மூட்டைகளிலோ, பெட்டிகளிலோ இருந்து கிழித்து கீழே வீசி எறிய வாய்ப்பில்லை. இரண்டாம்கட்ட நிவாரணப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட உள்ளதாகக் கூறப்படுவதால் அங்குள்ள மூட்டைகள், பெட்டிகள் மீது ஒட்டுவதற்காக இந்த ஸ்டிக்கர்களை சென்னையிலிருந்து வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும், அப்போது சில ஸ்டிக்கர்கள் தவறி கீழே விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x