தருமபுரி அருகே தேர் கவிழ்ந்து விபத்து | இருவர் உயிரிழப்பு; பலர் காயம் - ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவிப்பு

தருமபுரி அருகே தேர் கவிழ்ந்து விபத்து | இருவர் உயிரிழப்பு; பலர் காயம் - ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவிப்பு
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர்த் திருவிழாவின்போது அச்சு முறிந்து தேர் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அருகிலுள்ள மாதே அள்ளி கிராமத்தில் காளியம்மன் கோயில் தேர்த் திருவிழா இன்று(13-ம் தேதி) மாலை நடந்தது. கரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் திருவிழா நடந்த நிலையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் தேர்த் திருவிழாவில் பங்கேற்றனர். பக்தர்கள் பலரும் வடம் பிடித்து இழுக்க, தேர் வழக்கமான பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்தது.

தேர்நிலை எனப்படும் பகுதியை அடைய சற்று தூரமே இருந்த நிலையில் தேரின் அச்சு முறிந்து திடீரென தேர் முன்னோக்கி சாயந்தது. அப்போது தேரின் கீழே பக்தர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். இதைக்கண்டு விழாவில் பங்கேற்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தேருக்கு கீழாக சிக்கியிருந்தவர்களை விரைந்து மீட்டனர். 6 பேர் பலத்த காயங்களுடனும், 4 பேர் லேசான காயங்களுடனும் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (57), பாப்பிநாயக்கன அள்ளியைச் சேர்ந்த சரவணன் (50) ஆகிய இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இவர்கள் தவிர, மாதேஷ், முருகன், பெருமாள், மற்றொரு மாதேஷ் ஆகிய 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயமடைந்தவர்கள் பாப்பாரப்பட்டி பகுதியிலேயே முதலுதவி சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும், உயிரிழந்த இருவருக்கு தலா ரூ.5 லட்சமும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in