Published : 13 Jun 2022 07:44 PM
Last Updated : 13 Jun 2022 07:44 PM

“திடீர் உடல்நல பாதிப்பு... 3 முறை மருத்துவமனை அழைத்துச் சென்றோம்” - கைதி ராஜசேகர் மரணம் குறித்து சென்னை காவல் துறை விளக்கம்

சென்னை: ராஜசேகரை மூன்று முறை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும், அவர் திடீரென உடல்நிலை பாதிப்படைந்து இறந்துவிட்டதாகவும் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் விசாரணையின்போது மரணமடைந்தார். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "பி-6 கொடுங்கையூர் காவல் நிலைய எல்லையில் சமீபத்தில் ஒரு வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் திருடு போனது தொடர்பான வழக்கிலும், 2020-ம் ஆண்டு, கொடுங்கையூர் பகுதியில் பத்மாவதி என்பவரின் வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் திருடியது தொடர்பான வழக்கிலும், செங்குன்றம், அலமாதியைச் சேர்ந்த குற்றப் பின்னணி நபர் ராஜசேகர் என்பவர் சம்பந்தபட்டிருப்பது தெரியவந்தது.

அதன்பேரில், பி-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நேற்று (ஜூன் 12) ராஜசேகர் மணலி பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று காலை மணலி பகுதிக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ராஜசேகர் என்பவரை கைது செய்து, கொடுங்கையூர் எவரெடி காலனியில் உள்ள கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் ராஜசேகர், மேற்படி 2 குற்றச் சம்பவங்களிலும் திருடியதை ஒப்புக் கொண்டதுடன், மேற்படி திருடிய தங்க நகைகளை செங்குன்றம், காந்தி நகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர் சங்கர் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ராஜசேகர் சோழவரம் காவல் நிலைய திருட்டு வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது சோழவரம், சென்னை மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் ஒரு கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகள் என 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

காவல் குழுவினர் மேற்படி தங்க நகைகளை மீட்பதற்காக ராஜசேகரை செங்குன்றம் அழைத்துச் செல்ல தயாரான நிலையில், ராஜசேகர் வாந்தி வருவதாகவும், உடல்நிலை சரியில்லை என்றும் கூறியதன்பேரில், காவல் குழுவினர் ராஜசேகரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ராஜசேகருக்கு வாந்தி வருவதாகவும், உடல்நிலை சோர்வாக இருப்பதாகவும் கூறியதன்பேரில், அருகிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர், நாடித்துடிப்பு குறைவாக உள்ளதாகவும், உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியதின்பேரில், ராஜசேகரை சென்னை - ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராஜசேகர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து காவல் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் உயரதிகாரிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, பி-6 கொடுங்கையூர் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, செம்பியம் சரக உதவி ஆணையாளர் செம்பேடு பாபு இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற நடுவருக்கு தகவல் தெரிவித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ராஜசேகர் திடீரென உடல்நிலை பாதிப்படைந்து இறந்ததால், பி-6 கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்கள் ஜெயசேகர் , மணிவண்ணன் மற்றும் முதல்நிலைக் காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் நேற்று இரவு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் வழக்கின் விசாரணையை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு (சிபிசிஐடி) மாற்றி உத்தரவிட்டுள்ளார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x