“தமிழகத்தில் பாஜகதான் கருத்தியல் அடிப்படையில் செயல்படும் எதிர்க்கட்சி” - அண்ணாமலை கருத்து

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை | கோப்புப் படம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை | கோப்புப் படம்
Updated on
1 min read

கோவை: “தமிழகத்தில் கருத்தியல் அடிப்படையில் எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பது பாஜக” என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் எனில் தமிழகத்தின் சம்மதம் அவசியம். அதற்கு தமிழகம் சம்மதம் தெரிவிக்கப்போவதில்லை. தமிழக அரசின் அந்த முடிவை பாஜக ஆதரிக்கும்.

எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது மக்கள் அளிக்கும் வாக்கு மூலம் கிடைக்கிறது. 2021 சட்டப்பேரவை தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு மக்கள் எதிர்கட்சி அந்தஸ்து அளித்துள்ளனர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிமுகவுடனோ, மற்றொரு கட்சியுடனோ எதிர்கட்சிக்கு போட்டிபோடும் மனப்பான்மை பாஜவுக்கு இல்லை. பாஜக தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆளும்கட்சியாக வருவதற்கும், மக்கள் மனதை வெல்வதற்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை பாஜக செய்து வருகிறது.

மேலும், திமுக அரசு பேசும் அனைத்து விஷயங்களும் பாஜகவுக்கு எதிராக உள்ளது. கருத்தியல் அடிப்படையில் தமிழக அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் மக்கள் இரு பக்கங்களை முடிவு செய்கின்றனர். நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விஷயங்களில் தமிழகத்தில் முக்கிய கட்சிகள் ஒருபக்கம் உள்ளன. பாஜக மட்டும்தான் எதிர்பக்கம் உள்ளது. அதிமுகவுடன் ஒப்பிடுவதற்கோ, சண்டையிடுவதற்கோ நாங்கள் செல்லவில்லை.

கருத்தியல் அடிப்படையில் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பது பாஜக. பாஜகவை திமுகவினர் செயல்பட வைக்கின்றனர். திமுக கூறும் அனைத்து பொய்களையும், உண்மை மூலமாக ஆதாரத்தின் அடிப்படையில் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து வருகிறோம். பாஜக இன்னொரு கட்சியை அழித்துதான் வளர வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. பாஜக இங்கே வளர நிறைய வாய்ப்புகளை மக்கள் அளிக்கின்றனர்'' என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in