Published : 13 Jun 2022 03:55 PM
Last Updated : 13 Jun 2022 03:55 PM

செம்மஞ்சேரியில் ரூ.165 கோடியில் வெள்ளம் கடத்தும் கால்வாய்கள்: அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

சென்னை: செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை மற்றும் மதுரப்பாக்கம் ஓடைகளில் ரூ.165 கோடியில் வெள்ளம் கடத்தும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

சென்னை செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை, மதுரப்பாக்கம் ஓடைகளை பள்ளிக்கரணை கழுவெளி வரை இணைக்கும் வகையில் அவசர கால வெள்ளம் கடத்தும் கால்வாய் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் இன்று தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மற்றும் வண்டலூர் வட்டத்தில் உள்ள மதுரப்பாக்கம் ஓடை மற்றும் ஒட்டியம்பாக்கம் ஓடை முக்கியமான வெள்ள வடிகால்வாய் ஆகும். இவ்வோடைகள் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கிடைக்கப்படும் ஏரிகளின் உபரிநீர் மற்றும் மழைநீர் வடிந்து மேற்கண்ட கால்வாய்கள் வழியாக பள்ளிக்கரணை கழுவெளி சென்றடையும் வகையில் உள்ளது.

மேற்கண்ட இரு ஓடைகளும் 2015 ஆண்டின் வெள்ளப்பெருக்கில் சுமார் 3000 கன அடிக்கு மேல் வெள்ள நீர் வடிந்து கழிவெளியினை அடைந்து ஒக்கியம் மடுவு மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காட்டில் கடலில் சென்று கலக்கின்றது. செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளின் மேற்பகுதியில் வண்டலூர் காடுகளிலிருந்து அமைந்துள்ள 35 ஏரிகளின் வெள்ள உபரிநீரானது மதுரப்பாக்கம் ஓடை மற்றும் ஒட்டியம்பாக்கம் ஓடையின் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தெற்குப் பகுதியில் சென்றடையுமாறு இயற்கையாக அமைந்திருந்தது.

நிலவியல் அமைப்பு மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களின்படி இக்கால்வாய்கள் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளின் பட்டா நிலங்கள் மற்றும் அரசு நஞ்சை தரிசு நிலங்களின் வழியாக பரவி ஓடி பள்ளிக்கரணை கழுவெளியில் கலந்து வந்தது. மேற்கண்ட ஓடைகளிலிருந்து டிஎல்எப் குடியிருப்புக்கு வடமேற்கு பகுதிக்கு மேல் கால்வாய் தொடர்ச்சி இல்லாமல் இருப்பதினால், வெள்ள நீர்க் குடியிருப்பு பகுதிகளில் பரவி அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழைக்காலங்களில் சுமார் 3 முதல் 5 அடி அளவில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

நகரமயமாதலால் பட்டா நிலங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதாலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டதாலும், ஒட்டியம்பாக்கம் மற்றும் மதுரப்பாக்கம் ஓடையிலிருந்து வரும் வெள்ள நீர் இயற்கையாக பட்டா மற்றும் தரிசு நிலங்களின் மேல் பரவி ஓடி கழுவெளியில் கலக்க முடியாமல் குடிசைமாற்று குடியிருப்பு மற்றும் டிஎல்எப் மேற்குப் பகுதியில் வெள்ள நீர்த் தேங்கி சாலைகள் வழியாக ஓடி இப்பகுதிகளுக்கு மிகுந்த வெள்ளச் சேதம் ஏற்படுத்துகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் முதலமைச்சர் ஒவ்வொரு வருடமும் மக்கள் இவ்வாறு பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்கும் வகையில் மழைக்காலத்திலே வெள்ள பாதிப்புக்குள்ளான இந்த இடங்களை இரண்டு முறை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு காண நீர்வளத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது ரூ.165.35 கோடி மதிப்பில் இவ்விடத்தில் 6 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இப்பகுதிகள் வெள்ளப் பாதிப்பிலிருந்து தவிர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x