Published : 13 Jun 2022 04:00 PM
Last Updated : 13 Jun 2022 04:00 PM

“அரசியல்... ஓர் ஏழையை பணக்காரனாக்கும் வியாபாரம் அல்ல” - கமல்ஹாசன்

சென்னை: "அரசியல் என்பது வெறும் ஓட்டு எண்ணிக்கை மட்டும் அல்ல. எவ்வளவு கமிஷன் வாங்கலாம், எவ்வளவு பணக்காரன் ஆகலாம் என்பதும் இல்லை. ஓர் ஏழையை பணக்காரனாக்கும் வியாபாரம் அல்ல அரசியல். ஏழைகளையெல்லாம் அவ்வாறாக இல்லாமல் செய்வதுதான் அரசியல்".என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று ஆழ்வார்பேட்டையில் இன்று ரத்த தானக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நம்மவர் படத்தில் யார் ரத்தம் கொடுக்கலாம், யார் ரத்தம் கொடுக்க முடியாது என்ற விஷயம் இடம்பெற்றிருக்கும். அந்தப் படத்தில் கதாநாயகனுக்கு புற்றுநோய் வந்திருக்கும். அதனால், ரத்தம் கொடுக்காமல் சென்றுவிடுவார். போதைப்பொருட்கள் வந்துவிடும் என்பதற்கான எச்சரிக்கை நம்மவர் படத்திலேயே இருக்கும்.

நம்மவர் என்பது நான் மட்டுமல்ல, நீங்களும்தான். அதனால், உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், எனக்கு வராவிட்டாலும்கூட என் தலைமுறைக்கு வந்துவிடும் அது. கரோனா போன்றதுதான் இந்த வியாதி, அடுத்து இங்கு வராது என்று என்ன நிச்சயம். நம்ம வீட்டிற்குள் வராது என்று என்ன நிச்சயம். அதற்கான பாதுகாப்பை செய்ய வேண்டியது நம் கடமை. நமக்கு இருப்பதைவிட நல்ல ஓர் உலகத்தை நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டியது, நமது கடமை.

அந்தக் கோபத்தில்தான் ஏரி, குளம், நதியெல்லாம் பிளாட் போட்டு நீங்கள் விற்றீர்கள் என்றால், மழை வந்தால் என் மக்கள் செத்து விடுவார்கள் என்பதைத்தான் நியாபகப்படுத்துகிறோம். இது எதுவுமே நடக்காதது இல்லை, நான் ஏதோ ஓர் அரசியல் கட்சியை சாடவில்லை. ஒன்றியம் என்றால், எங்களைத்தான் சொல்வதாக கோபித்துக் கொள்கின்றனர். நான் எல்லா ஒன்றியத்தையும் சொல்கிறேன்.

தலைமையில் ஒரு கட்சி வந்துவிட்டால், சலாம் போடுவதற்கு இது முடியாட்சி கிடையாது, மக்களாட்சி இது. அதில் கேள்விகள் கேட்கப்படும். பெற்ற பிள்ளைகளே எதுக்குப்பா இதை நான் செய்ய வேண்டும் என கேட்பது இல்லையா? அதற்கு நாம் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும். ஏன் இப்படி, எனக்கு ஏன் இந்த பெயர் வைத்தீர்கள், அந்த பெயர் ஏன் வைக்கக்கூடாது. என் சாதிப் பெயரை எதற்கு என் பெயருக்குப் பின்னால் போட வேண்டும் என்று மகனுக்கு அப்பன் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறான்.

அதை என் பிள்ளைகள் கேட்கக் கூடாது என்பதற்காக, அவர்கள் பிறந்தவுடனே அவர்களது பிறப்புச் சான்றிதழிலிருந்து நீக்கிவிட்டேன் நான். என்னால் முடிந்தது, அவர்கள் நடக்கும் பாதையை குப்பையில்லாமல் ஓரங்கட்டி வைப்பதுதான். அந்த பெருக்கல், கழித்தலை நான் செய்துவிட்டேன். அதை எல்லோரும் செய்ய வேண்டும்.

இந்த ரத்தம் கொடுத்து உதவும்போது, சாதி மறந்துவிடும், மதம் மறந்துவிடும். நீங்கள் என்ன கடவுளை கும்பிடுகிறீர்கள், நான் என்ன கடவுளை கும்பிடுகிறேன் என்பதெல்லாம் மறந்துவிடும். அண்ணன் - தம்பி என்ற உறவு வலுக்கும். நாம் எல்லாம் காட்டுமிராண்டிகளாக இருந்தோம். ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்றுத் தின்று கொண்டிருந்தோம். ஒரு மனிதன் போகும்போது மனிதன் போகிறான் என்று பார்க்காமல், சாப்பாடு போகிறது என்று பார்த்துக்கொண்டிருந்தவர்கள்தான் நாம்.

இன்று அதையெல்லாம் கடந்து, ரத்த தானம் செய்ய வேண்டும். நம் உடலில் இருந்து கொஞ்சத்தை எடுத்து அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கும்போது, நாம் எல்லோருமே ஒரு சிபி சக்ரவர்த்தியாக மாறலாம். அதற்கான ஒரு விஞ்ஞானத்தை அளித்துள்ளனர், அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது மேலும் மேலும் நம்மை நல்ல மனிதர்களாக மாற்றும்.

அரசியல் என்பது வெறும் ஓட்டு எண்ணிக்கை மட்டும் அல்ல. அல்லது எவ்வளவு கமிஷன் வாங்கலாம், எவ்வளவு பணக்காரன் ஆகலாம் என்பது இல்லை. ஓர் ஏழையை பணக்காரனாக்கும் வியாபாரம் அல்ல அரசியல். ஏழைகளையெல்லாம் அவ்வாறாக இல்லாமல் செய்வதுதான் அரசியல். உங்கள் தெருவில் ஒருவன் பணக்காரனாக இருப்பது போதாது, அந்த தெருவே சுபிட்சமாக இருக்க வேண்டும். அப்படி என்றால், உங்களுக்கு பணத்தைப் பற்றி கவலைப்படாத ஒரு தலைவன் வேண்டும்.

இதை நான் சொல்லும்போது யாருக்கும் புரியவில்லை. என்னை நடிக்கவிட்டால், நான் 300 கோடி ரூபாய் சம்பாதிப்பேன். நான் என் கடனை எல்லாம் அடைப்பேன். நல்லா வயிறார சாப்பிடுவேன். உறவுகளுக்கு நண்பர்களுக்கு கொடுக்க முடிந்தததைக் கொடுப்பேன். அதற்குப் பிறகு இல்லை என்றால், இல்லை என்பதை தைரியமாக சொல்வேன். எனக்கு இந்த வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை. மனிதனாக இருப்பது போதுமானது. என்னிடம் இல்லாதபோது கொடுப்பதுபோல் ஏன் நடிக்க வேண்டும். மற்றொருவரை கொடுக்கச் சொல்லிவிட்டு நான்தான் கொடுத்தேன் என்று ஏன் நடிக்க வேண்டும்.

நன்றாக நடந்துகொண்டிருப்பவன் காலை ஊடேவிட்டு இடறிவிடுவது அல்ல எங்கள் அரசியல். தடுக்கி விழுந்தால், தூசியை தள்ளிவிட்டு, தடுக்கிவிட்டவனைக் கூட தள்ளி நிற்க சொல்லிவிட்டு எங்கள் பாதையில் நாங்கள் செல்வோம். அதைத்தான் செய்ய வந்திருக்கிறோம். இந்த அரசியல் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம்.

எனக்குப் பிடித்த இரண்டு தலைவர்களுக்கு சினிமா பிடிக்காது. அதற்காக எனக்கு அவர்களைப் பிடிக்காமல் போகவில்லை. நான் என் சினிமாவை விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் கருத்தையும், அறிவையும் எடுத்துக்கொண்டேன். இந்த புதிய அறிவியலையும் அதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நான் தொலைக்காட்சிக்கு சென்றபோது எதற்காக சின்னத்திரைக்கு போகிறீர்கள் என்று கேட்டனர். குடிசைக்குள் போனால்தான் கோபுரத்தில் வாழமுடியும். எனவே தொலைக்காட்சிக்குப் போனது அடுத்த பலமாகத்தான் எனக்கு தோன்றுகிறது, அடுத்தக்கட்டமாக தெரிகிறது.

ரிஸ்ட் வாட்ச்ல படம் காட்டி, அதனால் மக்களுக்கு செய்தி போகுமென்றால், நான் அங்கேயும் வேலை செய்வேன். எனவே என் தொழில் தொடரும். இது என் தொழில். பாரதியார் கவிதை என் தொழில் என்று சொன்னதுபோல் சினிமா என் தொழில். நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x