புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: போலீஸாரை எச்சரித்த நாராயணசாமி

புதுச்சேரியில் காங்கிரஸார் போராட்டம்.
புதுச்சேரியில் காங்கிரஸார் போராட்டம்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் ஐந்து முதல்வர்கள் செயல்படுவதாக, அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். போராட்டத்தின்போது போலீஸாருடன் காங்கிரஸாருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது நாராயணசாமியும் கடுமையாக எச்சரித்தார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பியது. டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இன்று ஆஜரானார். நாடு முழுவதும் காங்கிரசார் மீது பொய் வழக்கு போடுவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் காந்தி வீதியில் உள்ள மத்திய அரசு வருமான வரித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசு, நரேந்திர மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வருமான வரித்துறை அலுவலகத்தை நோக்கி நடந்தனர். போலீஸார் அலுவலக கேட்டை பூட்டி அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.

ஆர்ப்பாட்டம் நடக்கையில் போலீஸ் இன்ஸ்பெக்டர், "ஏன் பேரிகார்டு அமைக்கவில்லை" என பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸாரை கடிந்துகொண்டார். இதை தவறாக புரிந்துகொண்ட காங்கிரஸார், போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அப்போது பேட்டிக் கொடுத்துக்கொண்டிருந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி அங்கு சென்று போலீஸாரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து எச்சரித்தார். பின்னர் நிலையை விளக்கி கூறிய பின் காங்கிரஸார் சமாதானமடைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் மீது பொய் வழக்கு போட்டு அரசியல் ஆதாயத்துக்காக மத்திய பாஜக அரசு மிரட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. வரும் 2024ல் அனைத்து கூட்டணி கட்சிகளையும் ஒருங்கிணைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த தயாராகி வருகிறோம். இதை முறியடிக்க பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார்.

புதுவையில் முதல்வர் ரங்கசாமி உண்மையான முதல்வராக செயல்படவில்லை. டம்மியாக செயல்படுகிறார். சூப்பர் முதல்வராக ஆளுநர் தமிழிசை செயல்படுகிறார். அவர்தான் அனைத்துக்கும் பதில் தருகிறார். புதுவையில் 5 முதல்வர்களாக ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் சாய் சரவணக்குமார் ஆகியோர் உள்ளனர். ரங்கசாமி தனது அதிகாரத்தை செலுத்தாததால் அவருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in