Published : 13 Jun 2022 12:40 PM
Last Updated : 13 Jun 2022 12:40 PM

காவல் நிலைய மரணங்களை விசாரிக்க தனி காவல் பிரிவு தேவை: காந்திய மக்கள் இயக்கம்

தமிழருவி மணியன் | கோப்புப் படம்.

சென்னை: காவல் நிலைய மரணங்கள் குறித்து விசாரிக்க தனிக் காவல் பிரிவு அமைத்திட வேண்டும் என்று தமிழருவி மணியனை தலைவராகக் கொண்டு இயங்கிவரும் காந்திய மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இவ்வியக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.குமரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகக் காவல் துறையின் தலைவர் சைலேந்திரபாபு, கடந்த மே மாதம் திருச்சியில் நடந்த காவல்துறை அதிகாரிகள் பயிற்சி முகாமில், "காவல் நிலைய மரணங்கள், இனி இல்லை" என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அது வெறும் பேச்சளவிலேயே உள்ளது. நேற்று சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, சென்னை, தலைமைச் செயலக காவல் நிலையத்தில், வினோத் என்ற குதிரை ஓட்டுநர் மரணமடைந்தார். வினோத் உடலில் 13 காயங்கள் இருந்ததாக, உடற்கூறு ஆய்வு அறிக்கை குறிப்பிட்டதை அடுத்து, அது கொலைக் குற்ற வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குறைந்தது 10 ஆண்டுகள் விசாரணை நடக்கலாம்; இறுதியில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று காவலர்கள் விடுவிக்கப்படுவது கூட நடக்கலாம்.

அதே போன்று, திருவண்ணாமலை மாவட்டம் தண்டரனை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்ற மலைக்குறவர் சமூகத்தை சார்ந்த நபர் கள்ளச்சாராயம் காய்ச்சினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணையின் போது காவல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார். இது முதல்வர் உள்ளத்தை உருக்கிய ' ஜெய் பீம்' போன்று இன்னொரு நிகழ்வு.

1980களில் வால்டர் தேவாரம் தலைமையில் சுமார் இருபது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். மோதல் என்ற பெயரில் படுகொலைகளை நடத்துவது தமிழகத்திலும் கடந்த சுமார் 40 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நெருக்கடி நிலைக் காலத்தில் ஆந்திராவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையொட்டி மீண்டும் மோதல் கொலைகள் தொடர்ந்தன. 96-ல் மத்தியப் புலனாய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரசில் மட்டும் 2,097 உடல்கள் சட்ட விரோதமாக எரிக்கப்பட்டது தெரிய வந்தது. பிற பஞ்சாப் நகரங்களிலும் இதே நிலைதான். காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் கொல்லப்பட்டார்கள் என்பது இப்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் (85-96) ஆந்திர மாநிலத்தில் 1,049 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

தமிழகத்தில் மோதல் கொலைகள் செய்வதில் திமுக, அதிமுக, இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதிமுக ஆட்சி என்றாலே அது போலீஸ் ஆட்சிதான். அதிமுக ஆட்சியைக் காட்டிலும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவதில் நான் ஒன்றும் குறைந்தவன் இல்லை எனக் காட்டிக் கொள்ளும் நிர்ப்பந்தம் திமுகவுக்கு உள்ளது. ராஜசேகர் மரணத்திற்கும், வழக்கம் போல் சட்டத்தின் பிடியில் இருந்து ஒரு போதும் தப்ப முடியாது என்று, உள்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை கொடுப்பார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று குரல் எழுப்புவார். ஆளும் கூட்டணியினர், கூட்டணி தர்மம் காக்க, கடிதோச்சி மெல்லப் பேசுவர்.

கடந்த அதிமுக ஆட்சியில், சாத்தான்குளத்தில் நிகழ்ந்த மரணத்தில் உயிர் இழந்தோர், வணிகப் பெருமக்கள் ஆக இருந்ததால் அமைப்பு ரீதியாக அழுத்தம் கொடுக்க முடிந்தது. இருப்பினும் இறுதித் தீர்ப்பு எப்படி வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஓராண்டில், திமுக ஆட்சியில், சென்னை எம்ஜிஆர் நகர், சேலம் ஆத்தூர், கோவை கருமத்தம்பட்டி, தஞ்சை நகரம், நாமக்கல் பரமத்தி வேலூர், ராமநாதபுரம் கீழக்கரை, நாமக்கல் கிளைச் சிறை, நெல்லை தாலுகா என்று காவல்நிலைய மரணங்கள் சம்பவித்து உள்ளன.

நீதிமன்றங்கள், அவ்வப்போது சில வழக்குகளில் போலி மோதல்களைக் கண்டிக்காமல் இல்லை. மதுசூதனன் ராவ் போலி மோதலில் கொல்லப் பட்டபோது, புகழ்பெற்ற வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் பி.எஸ். மிஸ்ரா, சி.வி.என். சாஸ்திரி ஆகியோர் அளித்த தீர்ப்பு முக்கியமானது. அவர்கள் "காவல்துறைக் கொலைக்கும் சாதாரணக் கொலைக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருக்க முடியாது" என்றனர். மோதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை அனைத்துக் கிரிமினல் குற்றவாளிகளைப் போலவே புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினர். புகழ்பெற்ற டி.கே.பாசு-எதிர்-மேற்குவங்க அரசு வழக்கில் நீதியரசர்கள் குல்தீப்சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும், பி.யு.சி.எல்-எதிர்-இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன் ரெட்டி, சுகவ் சென் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

காவல் நிலையங்களில், நீதிமன்ற உத்தரவின்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, முறையாக இயங்கி இருந்தால் உண்மையில் நடந்தது என்ன என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். தெருக்களில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து, பல குற்றவாளிகளைப் பிடித்து உள்ள காவல்துறை, தனது காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தத் தயக்கம் காட்டுவது ஏன்? இன்னும் ஒரு காவல் நிலையம் மரணம் நிகழும் முன்பு, சம்பிரதாய அறிக்கைகள் கொடுப்பதற்குப் பதிலாக, சம்பிரதாய நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, முதல்வர் அவர்கள் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்திட, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மேலும் காவல் நிலைய மரணங்கள் குறித்து நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை 'பின்பற்றும் நடைமுறைகளாக' அரசு அறிவிக்க வேண்டும். போலி மோதல் சாவுகள், காவல் நிலைய மரணங்கள் குறித்து விசாரிக்க காவல்துறையிலேயே நேர்மையான அதிகாரிகள் கொண்ட தனிப்பிரிவினை அரசு அமைக்க வேண்டும் என்றும் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.'' என்று பா.குமரய்யா தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x