Published : 13 Jun 2022 09:31 AM
Last Updated : 13 Jun 2022 09:31 AM

லாக் அப் மரணங்கள் |  உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை: ஈபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இவை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இவ்வாட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியா அரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

சென்னை செங்குன்றம், அடுத்த அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவரை, திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை போலீஸார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ராஜசேகர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில், போலீஸ் விசாரணையின்போது விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 6 போலீஸார் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கைதி இறந்தது குறித்த விசாரணை சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x