Published : 13 Jun 2022 06:43 AM
Last Updated : 13 Jun 2022 06:43 AM

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.9.67 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு; ரூ.43.69 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

அறநிலையத் துறை சார்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ரூ.43.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.9.67 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்துவைத்தார். உடன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர்.

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.43.69 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்த முதல்வர் ஸ்டாலின், ரூ.9.67 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களைத் திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்ததேஸ்வரர் கோயிலில் ரூ.14.76 கோடியில் வீரவசந்தராயர் மண்டபம், திருமண மண்டபம், வணிக வளாகம், மாமல்லபுரத்தில் ரூ.96 லட்சத்தில் வைணவ பிரபந்த பாடசாலை, சென்னை கொசப்பேட்டை கந்தசாமி, ஆதி மொட்டையம்மன் கோயிலில் ரூ.1.55 கோடியில் வணிக வளாகம், மாதவரம்கைலாசநாத சுவாமி கோயிலில் ரூ.2.20 கோடியில் திருக்குளம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ரூ.2.56 கோடியில் முடிகாணிக்கை மண்டபம்,விருந்தினர் அறை, சேவார்த்திகள் ஓய்வறை, சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோயிலில் ரூ.2.28 கோடியில் வணிகவளாகம், பக்தர்கள் தங்கும் மண்டபம், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.2.50 கோடியில் விருந்து மண்டபம் கட்டப்பட உள்ளன.

இதேபோல, காரைக்குடி கொப்புடை நாயகியம்மன் கோயிலில் ரூ.1.50 கோடியில் புதிய வாரச்சந்தை, திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையம் வாழை தோட்டத்து அய்யன் கோயில் மேல்நிலைப் பள்ளியில் ரூ.96.50 லட்சத்தில் கூடுதல் கட்டிடம், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் ரூ.94 லட்சத்தில் வணிக வளாகம், குளித்தலை ரத்னகிரீஸ்வரர் கோயிலில் ரூ.78.80 லட்சத்தில் கம்பிவட ஊர்தி நிலையம், கட்டணச்சீட்டு விற்பனை அறை, வரிசை மண்டபம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

மேலும், மதுரை கள்ளழகர் கோயிலில் ரூ.62 லட்சத்தில் கோட்டைச்சுவர், ரூ.38.50 லட்சத்தில் ஆடி வீதியில் கல்தளம், ரூ.9.10 கோடியில் நுழைவுவாயிலில் இருந்து சோலைமலை முருகன் கோயில், இராக்காயி அம்மன் கோயில் வரை மலைப் பாதை, 4.2 கி.மீ. அளவுக்கு தார்சாலை மற்றும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற உள்ளன.

இதுதவிர, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.63லட்சத்தில் மலைக் கோயிலுக்குசெல்லும் பாதையில் கழிப்பறைகள், கன்னியாகுமரி குழித்துறை மகா தேவர் கோயில் பள்ளிக் கட்டிடங்களை ரூ.32 லட்சம் மதிப்பில் பழுதுபார்த்தல், அழகர்மலை முருகன் கோயிலில் ரூ.49 லட்சத்தில் கழிப்பறைகள், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் ரூ.1.14 கோடியில் மின்இணைப்பு வசதி என மொத்தம் ரூ.43.69 கோடி மதிப்பிலான பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிவைத்தார்.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் ரூ.2.50 கோடியில் திருமண மண்டபம், ஓய்வுக்கூடம், தங்கும் விடுதி, சிதம்பரம் இளமையாக்கினார் கோயிலில் ரூ.2.62 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தளம்,மதுரை சோழவந்தான் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி திருக்கோயிலில் ரூ.15 லட்சத்தில் வணிகவளாகம், கும்பகோணம் இன்னம்பூர் எழுத்தரிநாதர் கோயிலில் ரூ.63லட்சத்தில் அன்னதானக் கூடம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ரூ.61 லட்சத்தில் கழிப்பறை, குளியல் அறைகள், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.57 லட்சத்தில் அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளன.

இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரூ.49 லட்சத்தில் ஓய்வுக்கூடம், வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் ரூ.48 லட்சத்தில் அன்னதானக் கூடம், மதுரைமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில்ரூ.48 லட்சத்தில் கூடுதல் அறைகள், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ரூ.30 லட்சத்தில் முடிகாணிக்கை மண்டபம், கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயிலில் ரூ.30 லட்சத்தில் அன்னதானக் கூடம், உத்திரமேரூர் பச்சையம்மன் மன்னார் சுவாமி கோயிலில் ரூ.28 லட்சத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி, அருப்புக்கோட்டை சொக்கநாத சுவாமி கோயிலில் ரூ.26 லட்சத்தில் வாகன பாதுகாப்பு மண்டபம், அலுவலகக் கட்டடம் என மொத்தம் ரூ.9.67 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம்புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x