Published : 13 Jun 2022 07:57 AM
Last Updated : 13 Jun 2022 07:57 AM
பெரம்பலூர்: மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி அமைந்துள்ள வழித்தடங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
பெரம்பலூரில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது: கரோனா தொற்றுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை (இன்று) பள்ளிகள் தொடங்கப்படவுள்ள நிலையில், மாணவ - மாணவிகளின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள வழித்தடங்களில் கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளிப் பேருந்துகளை முழுமையாக ஆய்வு செய்ய வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்பு கேமரா பொருத்த பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தில் பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக வழங்கப்படும் பஸ் பாஸ் அட்டையை, ஸ்மார்ட் அட்டையாக வழங்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் அட்டை வழங்கும் வரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பஸ் பாஸ் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறையைச் சரி செய்ய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நிதித் துறை செயலர் மற்றும் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT