Published : 13 Jun 2022 07:18 AM
Last Updated : 13 Jun 2022 07:18 AM
தாம்பரம்: தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் புது நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்தார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் நீத்தார் சடங்கு செய்வதற்காக சிங்கப்பெருமாள் கோவிலுக்கு தனது குழந்தைகள் பிரசாந்த், அனித்திகா (8) ஆகியோருடன் பைக்கில் சென்றார்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்றபோது டேங்கர் லாரிமோதியது. இதில் அனித்திகா அதே இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.
இதனிடையே விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரி ஓட்டுநர் மானாமதுரையைச் சேர்ந்த கார்த்திக்கை அக்கம்பக்கத்தினர் விரட்டிச் சென்று பரனூர் சுங்கச்சாவடியில் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். மனைவி இறந்த நாளிலேயே மகளும் இறந்த சம்பவம் மண்ணிவாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமாரி (61). ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர். நேற்று காலை இருசக்கர வாகனத்தில் தாம்பரம் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதிவேகமாக வந்த பூந்தமல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விஸ்வாவின் மோட்டார் சைக்கிள் மோதியதில் செல்வகுமாரி அதே இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் விஸ்வா மற்றும் அவருடன் வந்த உறவினர் சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்துகள் குறித்து குரோம்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT