Published : 13 Jun 2022 06:34 AM
Last Updated : 13 Jun 2022 06:34 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 53 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி : பூஸ்டர் டோஸ் இலவசமாக போடாததால் ஏமாற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 30-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று 917 இடங்களில் நடைபெற்றது. சுமார் 53 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக நேற்று தமிழகம் முழுவதும் 30-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 917 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் 140 இடங்களிலும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் 777 இடங்களிலும் இம்முகாம் நடைபெற்றது. மருத்துவப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, விடுபட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டனர்.

இந்த முகாம்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை இன்னும் சுமார் 2.5 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

அவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக நேற்று 53 ஆயிரத்து 695 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அதேநேரம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. 18 முதல் 60 வயது வரையுள்ள மற்ற மக்கள் தனியார் தடுப்பூசி மையங்களில் பணம் செலுத்தி தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, முகாம்களில் பூஸ்டர் தவணை தடுப்பூசி குறைவானவர்களே போட்டுக் கொண்டனர். 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பலர் பூஸ்டர் தவணை தடுப்பூசி போட முகாமுக்கு வந்த நிலையில் இலவசமாக போட முடியாமல் திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x