Published : 13 Jun 2022 06:57 AM
Last Updated : 13 Jun 2022 06:57 AM
திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் வரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நடைபாதை சேதமடைந்தும் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளதால், கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
108 வைணவ தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் எனவும் அழைக்கப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் பலர் புண்ணிய நதியாக கருதப்படும் காவிரியில் நீராடிவிட்டு ரங்கநாதரை தரிசிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அம்மா மண்டபம் படித்துறையில் காவிரியில் குளித்துவிட்டு, ரங்கநாதர் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக அம்மா மண்டபத்திலிருந்து ராஜகோபுரம் வரை 1.2 கிமீ தொலைவுக்கு மேற்கூரையுடன் கூடிய நடைபாதை 2012-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த நடைபாதை, பக்தர்கள் மட்டுமின்றி காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் உட்பட வெயில், மழைக்காலங்களில் சிரமமின்றி செல்ல மிகவும் உதவியாக இருந்ததால், பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆனால், காலப்போக்கில் இந்த நடைபாதை சரியாக பராமரிக்கப்படாததால், ஆங்காங்கே மேற்கூரை சேதமடைந்தும், நடைபாதையில் பதிக்கப்பட்டிருந்த கற்கள் உடைந்தும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும், மேற்கூரையுடன் நிழலாக நடைபாதை உள்ளதால், வீடற்றவர்கள், வியாபாரிகள் மற்றும் நடைபாதையையொட்டி கடை வைத்துள்ளவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால், பக்தர்கள் நடைபாதையில் செல்ல முடியாமல், சாலையோரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால், கடைகளுக்கு, கோயிலுக்கு வருபவர்கள் என பலர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி செல்வதால், பாதசாரிகள் ஆபத்தான நிலையில் சாலையிலேயே நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி கடந்த மாதம் இச்சாலையில் நடந்துசென்ற ஒரு பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அம்மா மண்டபம் பகுதியில் வசிக்கும் சிவநாதன் கூறும்போது, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ரங்கம் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக மேற்கூரையுடன்கூடிய நடைபாதையை அமைத்தார்.
ஆனால், இந்த நடைபாதையில் பாதி இடத்தை கடைக்காரர்களும் மீதி இடத்தை வீடற்றவர்களும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், நடைபாதையை இப்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு தங்கியுள்ள வீடற்றவர்கள், நடைபாதைக்கு அருகே உள்ள மழைநீர் வடிகாலை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பக்தர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல், நிம்மதியாக ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நடந்து செல்லும் வகையில் விரைவாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்தும் சேதமடைந்துள்ளது குறித்தும் பொதுமக்களிடம் இருந்து ஏற்கெனவே புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும், நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT