Published : 12 Jun 2022 04:31 PM
Last Updated : 12 Jun 2022 04:31 PM

ராணுவத்தினர் தியாகத்தை கொச்சைப்படுத்துவதா? - ஆளுநருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கண்டனம்

ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப் படம்.

சென்னை: ஆளுநர் பதவியை விட்டு ஆர்.என்.ரவி உடனே விலக வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''சபரிமலை ஐயப்பனுக்காக பின்னணி பாடகர் யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல் இயற்றப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக சபரிமலை ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விழாவில் பேசுகையில், 'ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதையே நமது மார்க்கம் கூறுகிறது. மற்ற நாடுகளைப் போல ராணுவவீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாடு உருவாகவில்லை.

இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவானது. இந்தியாவில் ராணுவம் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகளும் முன்னேற்பாடுகள் செய்யாத நிலையில், அதை தடுப்பதற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளது. என ஆர்.என்.ரவி தனது ஆளுநர் பதவியை மறுந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ்., ஏஜெண்ட் போல பேசியிருக்கிறார். எண்ணற்ற தியாகங்களை செய்து இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாடு உருவாக்கப்பட்டது என்பது கட்டுகதையல்ல, அதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அரசர்களாலும், ராணுவ வீரர்களால் இந்தியா உருவாகவில்லை என்ற அப்பட்டமான பொய்யை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

பல மாகாணங்களாக பிரிந்து இருந்த இந்தியாவை ஒருங்கிணைத்த பெருமை பல கட்டங்களில் ஆட்சி செய்த அரசர்களையே சாரும். அதே போன்று, வெள்ளையர்களால் இந்திய தேசம் அடிமைப்பட்டு கிடந்த போது, அவர்களை எதிர்த்து போராடி, வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட அரசர்கள் தங்களது இன்னுயிரை இந்திய தேசத்திற்காக தியாகம் செய்திருக்கிறார்கள். ஒருபுறம் சீனா மறுபுறம் பாகிஸ்தான் பல்வேறு அச்சுறுத்தலை சந்தித்து வரும் இந்தியாவை தங்களது சுக துக்கம் இளமை காலங்களை தொலைத்துவிட்டு, எல்லையிலும், இமயமலை போன்ற கடும்குளிரிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் ஆர்.ரன்.ரவி கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

தனக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆளுநர் பதவியின் அழகை உணர்ந்து ஆர்.என்.ரவி செயல்படுவதை விட்டுவிட்டு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் ஆர்.என்.ரவி ஆளுநர், இந்த பதவியை விட்டு தானாகவே விலக வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x