Published : 12 Jun 2022 04:02 PM
Last Updated : 12 Jun 2022 04:02 PM

இந்தியாவிலேயே தமிழகத்தில் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி: அமைச்சர் செந்தில்பாலாஜி 

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்

சென்னை: "இந்தியாவில் பிற மாநிலங்கள் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்கிறன்றபோது, தமிழகத்தில் மட்டும் குறைந்த விலைக்கு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது" என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

வட சென்னை அனல்மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " நிலக்கரி கொள்முதல் இறக்குமதி தொடர்பாக சில விமர்சனங்கள் வந்தது. சில செய்திளும் கூட வெளியானது. 137 டாலருக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி என்பது தமிழக முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக வாரியத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டு, அது இரண்டு நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு, தற்போது நிலக்கரி வந்துகொண்டுள்ளது.

ஆனால், வேறு மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த குறைந்த விலையில், குஜராத் உள்பட எந்த மாநிலமும், ஏதாவது ஒரு மாநிலம் இந்த விலைக்கு 137 டாலர் ஜிஎஸ்டியுடன் சேர்த்தால் 143 டாலர் இந்த குறைந்த விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்துள்ளதாக செய்திகள் எதுவும் வந்ததாக எனக்கு தெரியவில்ல.

தமிழக முதல்வர் இந்த நிலக்கரி தட்டுப்பாடு வருவதற்கு முன்பாகவே எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சர்வதேச டெண்டர் கோரப்பட்டது. அதன்படி இரண்டு நிறுவனங்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. வேறு மாநிலங்களில் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்கிறன்றபோது, தமிழகத்தில் மட்டும் குறைந்த விலைக்கு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக நமக்கு 6 நாட்களுக்கான இருப்பு உள்ளது. மேலும் வரக்கூடிய நாட்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அது இல்லாமல், 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு ஏப்ரல், மே மாதத்திற்கு மட்டும் குறுகியகாலத்துக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கவில்லை.

தமிழகத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவது போல், நிறைகளையும் சுட்டிக்காட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பான மற்ற மாநிலங்களின் விலை குறித்த செய்திகளை வெளியிட்டால்தான் மக்களுக்கும் புரியும். நிலக்கரி ஒப்பந்தத்தில் ஒளிவு மறைவெல்லாம் கிடையாது. சர்வதேச அளவில் போடக்கூடிய டெண்டர், யார் வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம். விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் ஒப்பந்தங்கள் கொடுக்கப்படுகிறது.

மின் உற்பத்தியைப் பொருத்தவரை, சில இடங்களில் விநியோகத்தில், கட்டமைப்புகளில் பழுது ஏற்படுகிறபோது, விநியோகத்தை நிறுத்தம் செய்தாக வேண்டும்.அது தவிர்க்கவே முடியாதது. ஒரு வருடத்தில் 24 ஆயிரம் மின்மாற்றிகள் அமைக்கப்ப்டடுள்ளது. 316 துணை மின் நிலையங்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, டெண்டர் கோரும் நிலைக்கு வந்துவிட்டது.

தமிழகத்தில் மின்தேவை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் 14,000 மெகாவாட் தேவை இருந்த நிலையில்,தற்போது 16,500 மெகாவாட் தேவை உள்ளது. நாளொன்றுக்கு 8,800 டன் நிலக்கரி தேவைப்படுகிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x