

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பூச்சியேந்தலில் இருந்து 30 பேர் காரைக்குடியில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு நேற்று காலை பயணிகள் வேனில் சென்றனர். கண்ணமங்கலத்தைச் சேர்ந்த செல்வக்குமார்(32) என்பவர் வேனை ஓட்டினார். காலை 11 மணியளவில் காரைக்குடி தீயணைப்பு நிலையம் அருகே திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் வேன் பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் ஒரு பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த பூச்சியேந்தலைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர்இழந்தார். காயமடைந்த 7 குழந்தைகள் உட்பட 27 பேர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி பூச்சியேந்தலைச் சேர்ந்த சோனைமுத்து மனைவி பாப்பாத்தி (55), இளையான்குடியைச் சேர்ந்த கனகராஜ் மனைவி தவப்பிரியா (22) ஆகியோர் உயிரிழந்தனர். 8 மாதக் குழந்தையான பிரதிக்ஷா, கிருஷ்ணன், சங்கீதா, பூமிநாதன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டனர். விபத்து குறித்து குன்றக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர். காரைக்குடியில் சிகிச்சை பெற்று வருவோரை மாங்குடி எம்எல்ஏ சந்தித்து ஆறுதல் கூறினார்.
விபத்துக்குக் காரணமான லாரி தேவகோட்டையில் சிமென்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு அரியலூர் சென்றுள்ளது. இடையில் பிரேக் பழுதால், சாலையோரம் லாரியை நிறுத்தியுள்ளனர். மேலும்தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைேயாரம் வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே பழுதான வாகனங்களை நிறுத்த வேண்டும்.
ஆனால் சிலர் தங்களது வாகனங்களை விருப்பம்போல் சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர். இதை நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் கவனித்து நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது.
மேலும் விபத்து நடந்த இடத்தில் சார்-பதிவாளர் அலுவலகமும் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு வரும் வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில்தான் ஒழுங்கின்றி நிறுத்தப்படுகின்றன.