Published : 12 Jun 2022 10:40 AM
Last Updated : 12 Jun 2022 10:40 AM

சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: ஓபிஎஸ் பட்டியலிட்டு விளக்கம்

சென்னை: "சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது; ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது; ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லல் அவதியை எடுத்துக்காட்டுவது; ஆளும் கட்சியின் சட்டதிட்டங்களும், நிர்வாக முறைகளும் ஏழைகளை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது;

ஆளும் கட்சி என்னென்ன விதமான இதமளிக்கும் சட்டம் செய்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவது; உரிமையையும், உடமையையும் பறிகொடுக்கும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும்போது கண்டிப்பது, எதிர்த்து கிளர்ச்சி நடத்துவது போன்றவைதான் எதிர்கட்சிக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள்” என பேரறிஞர் அண்ணா கூறியிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு ஏற்ப, கடந்த ஓராண்டு காலமாக சிறந்த எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கம்.

உண்மை நிலை இவ்வாறிருக்க, எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அதிமுக பின்தங்கி இருப்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு, சமீப காலமாக அதுகுறித்த விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தருணத்தில் அதிமுக சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிராதன எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்படுகிறது என்பதை சில முக்கிய எடுத்துக்காட்டுக்களுடன் சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

> நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த களப் பணியாளர்களை மாற்றுமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளை திமுகவினர் மிரட்டியபோது, அதனைக் கண்டித்து 24-05-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டேன். இதனைத் தொடர்ந்து களப் பணியாளர்களை மாற்றுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

> ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்க திமுக அரசு முடிவெடுத்தபோது, அதனைக் கண்டித்து 02-06-2021 அன்று நான் அறிக்கை விடுத்ததோடு, அதில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், அவற்றை போக்கி சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்தேன். இதன் காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

> ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்தக் கட்டடம் மீண்டும் சட்டமன்றமாக மாற்றியமைக்கப்படும் என்ற செய்தி வெளிவந்தவுடன் அதனைக் கண்டித்து 11-06-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டதோடு இந்த முடிவை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தினேன். இன்றளவிலும் ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

> கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குறைந்தபட்ச உதவி கிடைக்கும் வகையில் புதிய வழிமுறைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அனைத்து குடும்பங்களும் நிவாரணம் பெறும் வகையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களில் இருக்கும் தவறினை சரி செய்யுமாறு 02-07-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

இது மட்டுமல்லாமல் 30-05-2021 அன்றே கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஒரே மாதிரியான முடிவை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தமிழக அரசு கூட இதுபோன்ற வேண்டுகோளை விடுக்கவில்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்றைக்கு, கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

> ஏழாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்தோடு புதிய சான்றிதழ்களை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதில் காலதாமதம் ஏற்பட்டபோது, அதனை வலியுறுத்தி நான் 14-07-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டேன். இதனையடுத்து, புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

> ஆவின் பால் அட்டைதாரர்களிடமிருந்து தனி நபர் விவரங்களைப் பெற அரசு ஆணையிட்டபோது அதற்குக் கண்டனம் தெரிவித்து நான் 09-08.2021 அன்று அறிக்கை வெளியிட்டேன். இதனைத் தொடர்ந்து தனி நபர் விவரங்களைப் பெறுவது கைவிடப்பட்டது.

> தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலைகளை சுட்டிக்காட்டி 23-09-2021 அன்று நான் விரிவான அறிக்கை வெளியிட்டேன். இதனைத் தொடர்ந்து 2,500 ரவுடிகளை காவல் துறையினர் பிடித்தனர்.

> மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 14 விழுக்காடு உயர்த்தப்பட்ட போது, அதனை மாநில அரசு ஊழியர்களுக்கும் 01-07-2021 முதல் வழங்க வேண்டுமென்று நான் 22-10-2021 நாளிட்ட அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், 01-01-2022 முதல் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

> காவிரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு 50 லட்சம் ரூபாய் செலவில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை தமிழக அரசினால் வெளியிடப்பட்டபோது அதனைக் கண்டித்து 01-11-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து இது கைவிடப்பட்டது.

> முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்தி 31-01-2022 அன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

> கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று 16-02-2022 அன்று முதன் முதலில் குரல் கொடுத்தவன் நான்தான்.

> மேகதாது அணை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 08-03-2021 அறிக்கை வாயிலாக தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதன் அடிப்படையில் 21-03-2022 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

> ஆன்லைன் விளையாட்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 30-03-2022 அன்றே நான் அறிக்கை விடுத்திருந்தேன். இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சூதாட்டங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு 03-06-2022 அன்று மீண்டும் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். தற்போது, அதற்கான குழுவினை தமிழக அரசு அமைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

> மத்தியப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவுத் தேர்வு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று 04-04-2022 அன்று நான் அறிக்கை வெளியிட்டேன். இதன் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

> பாரதிதாசன் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து நான் 08-05-2022 அன்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இதனைத் தொடர்ந்து, கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

> புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிடாத திமுக அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து 02-06-2022 அன்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன். தற்போது அதற்கான பணி துவங்கியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

> ஆவின் பால் குறைந்த அளவில் விநியோகிக்கப்படுவதையும், 100 கிராம், 200 கிராம் அளவிலான நெய் கிடைக்காததையும் சுட்டிக்காட்டி 05-06-2022 அன்று நான் அறிக்கை விடுத்திருந்தேன். தற்போது 100 கிராம், 200 கிராம் அளவிலான நெய் விநியோகிக்கப்படுகிறது.

> எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மூடு விழா நடத்திய திமுக அரசை கண்டித்து நான் 08-06-2002 அன்று அறிக்கை வெளியிட்டேன். இதனைத் தொடர்ந்து, இந்த வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் முழுவதும் ரத்து. மாதம் ஒரு முறை மின் கட்டணம், மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, சமையல் எரிவாயு மானியம், நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு, முதியோர் ஓய்வு ஊதியம் 1,500 ரூபாய், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 இலட்சம் பணியிடங்கள் நிரப்புதல், புதிதாக இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், 100 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்திவழங்குதல் போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை சுட்டிக்காட்டி பல அறிக்கைகளை நான் விடுத்திருக்கிறேன்.

இதேபோன்று, பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, அரசு நிர்வாகத்தில் திமுகவினரின் அராஜகங்கள், காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, கொலைகள், கொள்ளைகள், காவல் துறைக் கட்டுப்பாட்டில் உயிரிழப்புகள் ஏற்படுதல், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுதல், சாதிக் கலவரங்கள், மாணவர்கள் ஆசிரியரைத் தாக்குவது, விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்கள் உயர்வு, விளை பொருட்களுக்கு வியாபாரிகள் மீது ஒரு விழுக்காடு வரி, பஞ்சு விலை ஏற்றத்தால் ஜவுளித் தொழில் பாதிப்பு என பல மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை நான் அறிக்கைகள் வாயிலாக வலியுறுத்தி இருக்கிறேன்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தாலிக்குத் தங்கம், அம்மா மினி கிளினிக்குகள், மகளிர் இரு சக்கர வாகன மானியம் போன்ற திட்டங்களை நிறுத்தி வைத்ததற்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. சொத்து வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இது தவிர, தமிழக மக்களின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து பாரதப் பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் பல கடிதங்களை நான் எழுதியுள்ளேன்.

> கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலையின்போது மூன்று மாத காலத்திற்கு கடன் தொகையை நிறுத்தி வைக்குமாறும், வட்டியை தள்ளுபடி செய்யுமாறும் பிரதமருக்கு 01-06-2021 அன்று கடிதம் எழுதினேன்.

> நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரி 04-06-2021 அன்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு 18-06-2021 அன்றும் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

> தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது மற்றும் அவர்களை விடுவிப்பது குறித்து 20-07-2021, 16-10-2021, மற்றும் 20-12-2021 நாளிட்ட கடிதங்கள் வாயிலாக பாரதப் பிரதமருக்கு கடிதங்கள் எழுதினேன். இவைகள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

> வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்குத் தேவையான நிதியை விடுவிக்கக் கோரி 8-11-2021 நாளிட்ட கடிதம் வாயிலாக பாரதப் பிரதமருக்கு கோரிக்கை வைத்தேன்.

> கச்சத்தீவில் உள்ள செயின்ட் அந்தோணி தேவாலயத் திருவிழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்கக் கோரி 19-02-2002 நாளன்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

> ஆயத்த ஆடைகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி 5 விழுக்காட்டிலேயே இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரி 21-12-2021 கடிதம் வாயிலாக மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்தக் கோரிக்கையும் நிறைவேற்றித் தரப்பட்டது.

> ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து புறப்படுவதற்கான வசதியை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு 14-11-2021 கடிதம் வாயிலாக பிரதமரைக் கேட்டுக் கொண்டேன். இந்த கோரிக்கை இந்த ஆண்டு நிறைவேற்றப்படும் என மத்திய அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

> உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர ஆவன செய்ய வேண்டுமென்று 28-02-2022 நாளிட்ட கடிதம் வாயிலாக பிரதமருக்கு வேண்டுகோள் வைத்தேன். இதனை ஆபரேஷன் கங்கா மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியவர் இந்தியப் பிரதமர் .

> படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க 30-05-2022 கடிதம் வாயிலாகவும், உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் மருத்துவம் படிக்க உதவிடுமாறு 06-06-2022 கடிதம் வாயிலாகவும் பாரதப் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

அதிமுக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகளே போதும். எங்களைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளுதல்; எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியினரின் மக்கள் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டுதல்.

இதுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம். ஓராண்டு கால திமுக ஆட்சியின் அவல நிலையையும், அதிமுகவின் செயல்பாடுகளையும் வைத்தே தமிழகத்தில் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்பதை அறுதியிட்டு உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

திமுக அரசைப் பொறுத்தவரை, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், மதம் சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைத்து பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதுவே ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x