Published : 12 Jun 2022 05:07 AM
Last Updated : 12 Jun 2022 05:07 AM
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் 2,042 கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக கோயிலை தொல்லியல் வல்லுநர் நேரில் ஆய்வு செய்து 100 மற்றும் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிடப்பட்டது.
வல்லுநர் குழு பரிசீலனை
அதைத்தொடர்ந்து, கோயில் செயல் அலுவலர்கள், நிர்வாகியால் அக்கோயிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளை மண்டல வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும்.
அதன் அடிப்படையில் கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள் குறித்து மண்டல வல்லுநர் குழு பரிசீலனை செய்து மாநில அளவிலான வல்லுநர் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
வல்லுநர் குழு கடந்த ஓராண்டில் தஞ்சாவூரில் 141 கோயில்கள், திருச்சி - 137, நாகப்பட்டினம் 137, கடலூர் - 131, திருப்பூர் - 129, விழுப்புரம் - 118, ஈரோடு - 112, மயிலாடுதுறை - 108, சென்னை-2ல் - 103, தூத்துக்குடி - 102, திருநெல்வேலி - 92, சேலம் - 91, வேலூர் - 89, திருவண்ணாமலை - 88, காஞ்சிபுரம் - 85, சென்னை-1ல் - 82, சிவகங்கை - 81, கோவை - 81,மதுரை - 76, திண்டுக்கல் - 59 கோயில்கள் உள்ளிட்ட 20 மண்டலங்களில் 2,042 கோயில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை 157 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT