Published : 17 May 2016 03:15 PM
Last Updated : 17 May 2016 03:15 PM

வள்ளியூர்: வாக்குக்கு தந்த பணத்தை நிராகரித்த நரிக்குறவர்கள்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளி யூர் பூங்காநகரிலுள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 133 நரிக்குறவர்கள் நேற்று ஆர்வமுடன் வாக்களித்தனர். இவர்களில் 65 பேர் முதன்முறையாக நேற்று வாக்களித் தனர்.

இந்த நரிக்குறவர் காலனியில் கடந்த 25 ஆண்டுகளாக வீடு, கழிப்பிடம், சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வசதிகள் படிப்படியாக ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் இங்குள்ளவர்களுக்கு ரேஷன் அட்டைகளை மாவட்ட நிர்வாகம் வழங்கியிருந்தது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்புதான் இங்குள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அத் தேர்தலில் இச் சமுதாயத்தை சேர்ந்த 68 பேர் முதன்முறையாக வாக்களித்திருந்தனர். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக இங்கு வசிக்கும் மேலும் 65 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று வள்ளியூரிலுள்ள நோபிள் நினைவு உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் 133 நரிக்குறவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அவர்களில் 68 பேர் இரண்டாவது முறையாகவும், 65 பேர் நேற்று முதன்முறையாகாவும் வாக்களித்தனர்.

பணம் பெற மறுப்பு

இங்குள்ள 133 நரிக்குறவர்களிடம் வாக்குக்கு பணம் கொடுக்க கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் முயன்றுள்ளன. ஆனால் பணம் வாங்க இங்குள்ள பெரியவர்கள் மறுத்துவிட்டதாக வாக்களித்துவிட்டு திரும்பிய மோகன் (67) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் எங்களது பெயரை சேர்த்தபின்னர்தான் அரசியல்வாதிகள் எங்கள் பகுதிக்கு வந்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் இடத்துக்கு அவர்கள் வந்ததே இல்லை. எனவே, ஓட்டுக்கு உள்ள மரியாதையை தெரிந்துகொண்டதால் யாரிடமும் காசு வாங்கவில்லை” என்று தெரிவித்தார்.

இது குறித்து பிரமிளா என்பவர் கூறும்போது, “நாங்கள் பாசி, ஊசி, மாலை விற்று பிழைப்பு நடத்துபவர்கள்தான். சில நேரங்களில் பிச்சை எடுத்தும் பிழைக்கிறோம். ஆனால் நாங்கள் ஓட்டுக்கு காசு வாங்கவில்லை. இது சத்தியம். காசு வாங்கினால் எங்களுக்கு அரசியல்வாதிகள் எதையும் செய்து தரமாட்டார்கள். எங்களுக்கு எல்லாவற்றையும் அரசு அதிகாரிகள்தான் இதுவரை செய்து கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x