Published : 12 Jun 2022 05:36 AM
Last Updated : 12 Jun 2022 05:36 AM

பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளிக்கு கட்டிடம் கட்ட ரூ.20 லட்சம் வழங்கிய முன்னாள் மாணவர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட நடந்த பூமி பூஜையில் பங்கேற்றோர். (உள்படம்) முன்னாள் மாணவர் அருள்சூசை.

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட, பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.20 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் ஆலடிக்குமுளையில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு போதிய அளவு இடவசதி இல்லாத நிலையில் 6, 7-ம் வகுப்புகள் மாணவர்கள் ஒரு வகுப்பறையிலும் 8, 9-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு வகுப்பறையிலும் கல்வி பயின்று வருகின்றனர்.

இடநெருக்கடி காரணமாக மாணவர்கள் அவதிப்பட்டு வருவதை அறிந்த, இதே பள்ளியின் முன்னாள் மாணவரும், துபை தொழிலதிபருமான, வீரக்குறிச்சியைச் சேர்ந்த அருள்சூசை (38), இப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட ரூ.20 லட்சம் நிதி வழங்க முன்வந்தார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் அனுமதி பெற்று, கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கட்டிடம் கட்ட நிதி வழங்கிய நன்கொடையாளர் அருள்சூசை மற்றும் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், சிங்கப்பூரில் வசிப்பவருமான வை.கோவிந்தராஜ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா.அண்ணாதுரை கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நன்கொடையாளரை பாராட்டிப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x