

தமிழகத்தில் வேதனை ஆட்சி நடக்கிறது என சூளகிரியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேசினர்.
இதில், அக்கட்சியின் மாநில தலைவர் பேசியதாவது:
பிரதமர் மோடியின் ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர். தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிலை இன்று மாறியுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன.
இந்தியா ஓசூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இருசக்கர வாகன உற்பத்தியில் 15 சதவீதம், ஓசூரில் உற்பத்தியாகிறது. மாவட்டத்தில் எந்த பகுதிக்குச் சென்றாலும் பிரதமர் மோடியின் ஏதாவது ஒரு திட்டம் செயல்பாட்டில் இருந்து கொண்டே இருக்கிறது.
8 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் மக்களுக்கு சலிப்பு தட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் ஒரு ஆண்டு திமுக ஆட்சியில் எப்பொழுது தேர்தல் வரும் என்கிற எண்ணம் மக்களுக்கு எழுந்துள்ளது. தமிழகத்தில் வேதனை ஆட்சி நடக்கிறது. மேலும், தமிழகத்தில் லஞ்சம் இல்லாத ஒரு தினத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்து ரூ.250 கோடி வருமானம் சேர்த்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார். ஆனால் 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் அந்த நிலத்தை குத்தகைக்கு விட்டனர் என ஏன் கூறவில்லை. 2024-ல் பிரதமர் மோடிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. 400 எம்பிக்கள் கிடைப்பார்கள். தமிழகத்தில் இருந்து 25 பேர் எம்பிக்களாகச் செல்ல வேண்டும். கிருஷ்ணகிரியில் இருந்து ஒரு எம்பி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்பிக்கள் கே.பி.ராமலிங்கம், நரசிம்மன், மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மாநில துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாநில செயலாளர் வினோஜ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.