சாதியை வைத்து மக்களை பிரித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள்: பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

கோப்புப்படம் | படம்: பி.வேளாங்கன்னி ராஜ்
கோப்புப்படம் | படம்: பி.வேளாங்கன்னி ராஜ்
Updated on
1 min read

கோவை: தமிழக அரசியல் கட்சிகள் சாதியை வைத்து மக்களை பிரித்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் எல்லாம் சாதி, மதம், இனம், மொழியை வைத்து பிரித்து வருகின்றனர். பாமக மக்களை இணைத்துக் கொண்டிருக்கிறது. சாதி ரீதியாக பாமக மீதான விமர்சனத்தில் உண்மை இல்லை. எங்கள் வளர்ச்சியை பிடிக்காத திராவிடக் கட்சிகள், எங்களை ஒரு வட்டத்துக்குள் அடைக்க திட்டமிடுகின்றனர். அந்த திட்டம் நிறைவேறாது. மக்கள் எங்களை புரிந்து கொண்டிருக்கின்றனர்.

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 அதிகரித்துள்ளனர். அதுபோதுமானது இல்லை. இதை வைத்து விவசாயம் செய்ய இயலாது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3 ஆயிரம் அளிக்க வேண்டும். மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக வரும் 17-ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடத்த உள்ளனர். அதில் கர்நாடகாவின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரி படுகையைில் அணை கட்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை மீறி கர்நாடகா அரசு இந்தத் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிவித்தது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. ஆனால், மத்திய அரசு இதை ஆதரித்து வருகிறது. தேர்தல் காரணமாக பாஜக அரசு இதை செய்து வருகிறது. ஒருபோதும் தமிழக அரசு இதை அனுமதிக்கக்கூடாது.

நூல் விலை அதிகரித்து உள்ளதால் பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் பதுக்கலை தடுக்க வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளது. அதை நடப்பாண்டே நிறைவேற்ற வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in