

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மே 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காணாமல் போகும் குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் வகையிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்நாளில் சர்வதேச அளவில் பல நாடுகள் குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். இதில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது.
ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் பெண் குழந்தைகள் 55 சதவீதமும், ஆண் குழந்தைகள் 45 சதவீதமும் காணாமல் போகிறார்கள்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சைல்டு லைன் இயக்குநர் மரியசூசை கூறும்போது, “குழந்தை கடத்தல், படிக்க விருப்பமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் வீட்டைவிட்டு வெளியேறுதல் ஆகிய காரணங்களால் குழந்தைகள் காணாமல் போகின்றனர். அவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சில நேரங்களில் கொல்லப்படுகிறார்கள்.
மேலும் சில நேரங்களில் கடத்தல் தொழில், பாலியல், கொத்தடிமைகள், பிச்சை எடுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். எனவே, காணாமல்போகும் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருக்கவேண்டும். சைல்டுலைன் பற்றியும் பொது மக்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
சைல்டுலைன்
ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை அமைப்பு இது. அதன் தேசிய அளவிலான 24 மணிநேர அவசர இலவச தொலைபேசி எண்- 1098.
காணாமல் போன குழந்தைகளை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்கும் பணியில் சைல்டுலைன் அமைப்பு ஈடுபட்டுள்ளது.
குழந்தைகளுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்” என்றார் அவர்.