Published : 15 May 2016 03:03 PM
Last Updated : 15 May 2016 03:03 PM

பூத் சிலிப் இல்லாதவர்களும் மற்ற ஆவணங்களைக் காட்டி வாக்களிக்க வசதி

பூத் சிலிப் இல்லாதவர்களும் மற்ற 11 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பூத் சிலிப் கிடைக்காதவர்கள், இல்லாதவர்கள் வாக்களிக்க மாற்று வழி உண்டு என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மே 16-ம் தேதி நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் பூத் சிலிப் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள், தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, வங்கி-அஞ்சலக கணக்கு புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது), நிரந்தர கணக்கு எண் அட்டை (பேன் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை போன்றவற்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு மற்றும் நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட் டுள்ள அலுவலக அடையாள அட்டை போன்ற ஆவணங்களைக் காட்டியும் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தைக் காட்டி வாக்களிக்கலாம்.

1950 என்ற எண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை எம்.எம்.எஸ். அனுப்பி வாக்குச்சாவடி விவரங்களை வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம். வாக்காளர்களின் வசதிக்காக, பிரத்யேக செயலி ஒன்றையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சாய்வுதளம், சக்கர நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்துத் தொகுதிகளிலும் பெண்களுக்கு தனியாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், பெண் போலீஸாரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது'' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x