Published : 24 Jun 2014 09:56 AM
Last Updated : 24 Jun 2014 09:56 AM

போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த 6 பேர் சிக்கினர்: 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு விற்பனை

போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்பனை செய்த இலங்கை தமிழர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் போலியாக பாஸ் போர்ட் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை காவல் துறையினர் கண்காணிக்க ஆரம்பித்தனர்.அப்போது 2003, 2005-ம் ஆண்டுகளில் போலி பாஸ்போர்ட் தயாரித்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை பெற்று, விடு தலையாகி வெளியே வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீண்டும் போலி பாஸ்போர்ட் தயாரிப்பது தெரிந்தது.

அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் புரசை வாக்கம் பீட்டர்ஸ் சாலையை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(29), ஆலப் பாக்கத்தை சேர்ந்த ராஜன்(42), சிவரங்கன்(55), திருவான்மியூரை சேர்ந்த தேவசகாயம் பேட்ரிக், மதுர வாயலை சேர்ந்த ஜெயராஜசேகரன் ஆகிய 5 பேருக்கும் போலி பாஸ் போர்ட் தயாரிப்பில் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல புதிய தகவல் கள் காவல் துறையினருக்கு கிடைத் தன. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

காலாவதியான மற்றும் பயன் படுத்தப்படாத பாஸ்போர்ட் களை சேகரித்து, அதில் லேமினேசனை எடுத்து, போலி பாஸ்போர்ட் தேவைப்படுவோரின் புகைப்படத்தை ஒட்டி இந்த பாஸ்போர்ட்களை தயாரிக்கின்றனர். பின்னர் அந்த நபர் எந்த நாட்டிற்கு செல்ல வேண்டுமோ அந்த நாட் டிற்கு ஏற்கெனவே சென்று வந்தது போல போலியான முத்திரையை பாஸ்போர்ட்டில் பதிக்கின்றனர். அதன் பின்னர் அந்த நாட்டிற்கான விசா பெற விண்ணப்பிக்கின்றனர். இப்படி செய்வதன் மூலம் ஏற்கெனவே வந்து சென்றவர் என்று எந்த பிரச்சினையும் இல்லாமல் விசா கிடைத்துள்ளது.

பாஸ்போர்ட் மட்டும் தயாரிக்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும், விசாவிற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையும் அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்கு ஏற்றவாறும் வசூல் செய்துள்ளனர். இப்படி போலியாக பாஸ்போர்ட், விசா பெற்றவர்கள் பிரச்சினைகள் இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் ஒரு இமிகிரேசன் அலுவலரையும் பழக்கப்படுத்தி வைத்துள்ளனர். போலி பாஸ்போர்ட் பெற்றவர்களை விமான நிலையம் வரை அழைத்துச் சென்று இவர்களுக்கு பழக்கமான இமிகிரேசன் அலுவலர் இருக்கும் கவுன்டர் வழியாக செல்ல வைக்கின்றனர். அந்த இமிகிரேசன் அலுவலரும் போலி பாஸ்போர்ட் கொண்டு வருபவர்களை ஓ.கே.செய்து அனுப்பியிருக்கிறார். அந்த இமிகிரேசன் அலுவலர் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

கைதான 6 பேரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து இலங்கை தமிழர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா பெற்று வெளிநாடு சென்றிருக்கும் தகவல் இவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்தது. மேலும், 110 போலி பாஸ்போர்ட், மலேசியா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அரபு நாடுகளின் போலி விசாக்கள், நூற்றுக்கும் மேற் பட்ட நாடுகளின் போலி முத் திரைகள் போன்றவையும் இவர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றப் பட்டன.

இவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட், விசா பெற்றவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x