Published : 11 Jun 2022 05:56 AM
Last Updated : 11 Jun 2022 05:56 AM

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ரூ.270.15 கோடி மதிப்பிலான புதிய குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய முதல்வர்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.270.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தாமாக வீடு கட்டும் திட்டத்தில் 23,826 பேருக்கு ரூ.500.34 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும் வழங்கினார்.

இதுதவிர, 4,880 பயனாளிகளுக்கான குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள், 938 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான கிரையப் பத்திரங்களையும் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1970-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து கடந்த ஆண்டு செப்.1-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த வாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள ஆலையம்மன் கோயில் பகுதி-1 திட்டப் பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, ரூ.41.20 கோடியில் தூண் தளம் மற்றும் 9 தளங்களுடன் 324 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அசோக்நகர் ஆர்-3 காவல் நிலையம் திட்டப் பகுதியில் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.10.44 கோடியில் 80 புதிய குடியிருப்புகளும், வியாசர்பாடி டி.டிபிளாக் திட்டப் பகுதியில் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.60.60 கோடியில் 468 புதிய குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன.

இதேபோல திருச்சி, கல்மந்தை திட்டப் பகுதியில் 192 புதிய குடியிருப்புகள், அரியலூர் கீழப்பழுவூர் திட்டப் பகுதியில் 576 புதிய குடியிருப்புகள், தேனி வடவீரநாயக்கன்பட்டி பகுதி-2 திட்டப் பகுதியில் 175 தரைதள இரட்டை குடியிருப்புகள், திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதி - I திட்டப் பகுதியில் 480 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம் அணைப்பள்ளம் திட்டப் பகுதியில் 208 புதியகுடியிருப்புகள், நீலகிரி மாவட்டம் கடசனக்கொல்லி திட்டப் பகுதியில் 204 தனி வீடுகள் என மொத்தம் ரூ.270.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

ஒவ்வொரு குடியிருப்பும் 400சதுர அடிக்கு குறையாமல் அமைந்துள்ளன. ஒரு பல்நோக்கு அறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை வசதிகள் உள்ளன. அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும் சாலை, குடிநீர், கழிவுநீரேற்றும் வசதி, மின் தூக்கிகள், சிறுவர் பூங்கா, மின்னாக்கிகள், தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வீடு கட்ட தலா ரூ.2.10 லட்சம்

இதைத் தொடர்ந்து, 4,880பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் வழங்கினார். மேலும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பல்வேறு மாவட்டங்களில் 23,826 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.500 கோடியே 34 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகள், 938 பயனாளிகளுக்கு கிரையப் பத்திரங்களையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், தலைமைச் செயலர் வெ. இறையன்பு, வீட்டுவசதித் துறை செயலர்ஹிதேஷ்குமார் மக்வானா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x