Published : 11 Jun 2022 05:30 AM
Last Updated : 11 Jun 2022 05:30 AM

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு - ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழுவின் முழுவிவரம்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இணையதள சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த ஆண்டு பிப்.25-ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதை ரத்து செய்தது. மேலும், அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல் பூர்வ தரவுகளை விளக்கத் தவறியதாகவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை கண்டறியவும், இந்த விளையாட்டுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவற்றை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் 2 வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வாங்கடே ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன்மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் முன்மாதிரி சட்டமாக அமையும். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி பாமக சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x