Published : 13 May 2016 02:15 PM
Last Updated : 13 May 2016 02:15 PM

கணிக்க முடியாத மதுரை தெற்கு தேர்தல் களம்: திமுக, அதிமுகவை அச்சுறுத்தும் மதிமுக வேட்பாளர்

மதுரை தெற்கு தொகுதி 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு முதல் தேர்தலை சந்தித்தது. பின்னர் இத்தொகுதி நீக்கப்பட்டு 2011-ம் ஆண்டு மறுசீரமைப்பின்போது மீண்டும் இதே பெயரில் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதியில் இடம்பெற்றிருந்த பல பகுதிகள் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டன. மதுரை தெற்கு தாலுகாவில் ஒருபகுதி, மாநகராட்சியின் 21 வார்டுகள் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

திருமலைநாயக்கர் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், அரசு ராஜாஜி மருத்துவமனை, பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனை, முனிச்சாலை, காமராஜர் சாலை உட்பட பல பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

காமராஜர் சாலை போக்கு வரத்து நெரிசல், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு, மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்காதது, சீரமைக்கப்படாத கிருதுமால் நதி வாய்க்கால் என பல பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. 1951-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டி.கே.ரமா (காங்கிரஸ்) வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ரா.அண்ணாதுரை (மா.கம்யூ) வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் ஆண் வாக்காளர் 1,08,417 பேரும், பெண் வாக்காளர்கள் 1,10,800 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும் என மொத்தம் 2,19,223 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணன், திமுக சார்பில் பாலசந்திரன், மதிமுக சார்பில் புதூர் மு.பூமிநாதன், பாஜக சார்பில் ஏ.ஆர்.மகாலட்சுமி, பாமக சார்பில் மாரிசெல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் விஜயகுமார் மற்றும் சுயேச்சைகள், மற்றவர்கள் 6 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் சவுராஷ்டிரா, முக்குலத்தோர், நாடார் மற்றும் தாழ்த்தப்பட்டபகுதி மக்கள் வசிக்கின்றனர்.

சவுராஷ்டிரா சமூகத்தினர் பரவலாக வசிப்பதால் அதிமுக, திமுக, பாஜக சார்பில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். மதிமுக சார்பில் மறவர் சமூகத்தை சேர்ந்த பூமிநாதன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்களில் பாஜக வேடபாளர் 6 மாதங்களுக்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதால் அவர் பிரச்சாரத்தில் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு கடும் போட்டியாகத் திகழ்கிறார். இவர் கணிசமான வாக்குகளைப் பெறும் வாய்ப்புள்ளதால் இவர் பெறும் வாக்குகள் யாருடைய வெற்றியை பாதிக்கும் என்பது தெரியாமல் அதிமுக, திமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் என்.நன்மாறனிடம் 51 வாக்குகள் வித்தியாசத்தில் பூமிநாதன் நூலிழையில் தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலிலும் மற்ற வேட்பாளர்களுக்கு பூமிநாதன் கடும் போட்டியை அளித்து வருகிறார். இவர் முக்குலத்தோர் சமுதாயத்தினரின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் வாய்ப்புள்ளது. வைகோ, விஜயகாந்த், பிரேமலதா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் இவருக்காக தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளதால் திமுக, அதிமுக வேட்பாளர்களைப்போல் இவருக்கும் வெற்றிக்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக வேட்பாளர் செலவு செய்யாதது, பிரச்சாரத்தை தீவிரப் படுத்த வேகம் காட்டாதது, அமைச்சர் இந்த தொகுதியை கண்டுகொள்ளாமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது. திமுகவில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். அதனால், அக்கட்சியில் சீட் எதிர்பார்த்த மாநகர வடக்கு மாவட்ட செயலர் வேலுச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஆர்வமில்லாமல் உள்ளது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கடைசி நேர தீவிர பிரச்சாரம், பணப்பட்டுவாடாவைப் பொருத்து வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x