Published : 11 Jun 2022 07:27 AM
Last Updated : 11 Jun 2022 07:27 AM

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி சென்னையில் அன்புமணி தலைமையில் பாமக ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி அன்புமணி தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய பாமகவினர்.படம்: ம.பிரபு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய உடனடியாக அவசர தடைச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, சென்னையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சித் தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, தேர்தல் பணிக்குழுத் தலைவர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு மற்றும் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில், அன்புமணி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பின்னர் தமிழகத்தில் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆனால், அந்த சட்டத்தை நீதிமன்றம் தடை செய்த பின், தற்கொலைகள் தொடர்கின்றன. இதுவரை ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 23 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்து, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தரவுகளை சேகரித்து, அரசிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அவசர சட்டத்தைக் கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். கடந்த ஆண்டே இதை செய்திருந்தால் 23 பேர் இறந்திருக்க மாட்டார்கள். எனவே, அவசர சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார்.

இதற்கிடையில், ராமதாஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு பாமக-தான் காரணம். வல்லுநர் குழு பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, இரு வாரங்களில் அறிக்கை பெற்று, உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x