

சென்னை: ஜெயங்கொண்டம் தனியார் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக கையகப்படுத்திய நிலங்களின் உரிமையாளர்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: ஜெயங்கொண்டம் தனியார் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்திய நிலங்களை உரிமையாளர்களிடமே திருப்பி ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், திமுகவினரும், அதன்கூட்டணி கட்சியினரும் ஏதோ மிகப்பெரிய சாதனையை செய்துவிட்டதுபோல மார்தட்டிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.
முறையான திட்டமிடுதல் இல்லாமல், இந்த நிலங்களை கடந்த 1997-ம்ஆண்டில் கையகப்படுத்தியதே திமுக அரசுதான். திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியாது என்று தெரிந்ததும், தனியார் நிறுவனத்துக்கு அளிக்க முயற்சித்தது அன்றைய அரசு. அதுவும் முடியாத நிலையில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, கடந்த 2007-ல் என்எல்சி நிறுவனம் இந்த நிலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியதும் திமுக அரசே.
உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்து, இழப்பீடாக பெரும் தொகையை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால், பணம் கொடுக்க வழி இல்லாமல், நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைக்க அரசு முன்வந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக மக்களை வாட்டி, வதைத்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியதற்காக இந்த நில உரிமையாளர்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.