

மயிலாடுதுறை: தமிழகத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த 9-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வந்தார். அவர் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அதிமுக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதாலேயே அதை முடக்கினர். அதிமுக உள்ளிட்ட கட்சிகள், மக்கள்எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. ஏனென்றால், எதிர்க்கட்சி வரிசையில் அதிக வாக்கு சதவீதம் கொண்ட கட்சியும், அதிக எம்எல்ஏக்களை கொண்ட கட்சியும் அதிமுகதான்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரசு ஆய்வு நடத்த தீட்சிதர்கள் ஒத்துழைக்காதது குறித்து முழுவிவரம் கிடைத்த பிறகே, அதுபற்றி கருத்து கூறமுடியும்.
எல்லா மதங்களையும் சமமாகபார்க்க வேண்டும். மத விவகாரங்களில், ஆண்டாண்டு காலமாக பின்பற்றும் வழிமுறைகளில் அரசு தலையிடக் கூடாது. ஆதீன விவகாரங்களில் திட்டமிட்டு இந்த அரசு மூக்கை நுழைக்கப் பார்க்கிறது. இது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக பட்டினப் பிரவேசம் நடந்து வருகிறது. அதை வேண்டுமென்றே இந்த அரசு தடை செய்தது. பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்ததால் அரசு இறங்கி வந்து அனுமதி அளித்தது.
தற்போது தமிழகம் முழுவதும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவை மீட்பது தொடர்பாக சசிகலா, டிடிவி தினகரன் பேசிவருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பலமுறை சொல்லிவிட்டேன். தயவுசெய்து அதுகுறித்து கேள்வி கேட்க வேண்டாம்” என்றார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.