‘நீட் ' தேவையல்ல என்பதே அதிமுக நிலை: கிருஷ்ணகிரியில் தம்பிதுரை எம்.பி. தகவல்

‘நீட் ' தேவையல்ல என்பதே அதிமுக நிலை: கிருஷ்ணகிரியில் தம்பிதுரை எம்.பி. தகவல்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: நீட் தேர்வு தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை எம்.பி. தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நடந்த தனியார் பயிற்சி மைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பொறியியல் கல்லூரியும், தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல கல்லூரிகளும் திறக்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரியை முன்னாள் முதல்வர் பழனிசாமி தொடங்கினார்.

அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வியில் மேம்பட்டு உள்ளது.

நீட் தேர்வு என்பது போட்டித்தேர்வா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. வேலைவாய்ப்புகளுக்காக நடத்தப்படும் தேர்வுகள்தான் போட்டித் தேர்வு. நீட் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல. எனவே அதிமுக நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.

தமிழகத்தில் ஆளும் கட்சியை தவிர அனைத்து கட்சிகளுமே எதிர்க்கட்சிகள்தான். பாஜக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் என அனைவருமே எதிர்க்கட்சிகள்தான்.

ஏன் என்றால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற காங்கிரஸ் கட்சிக்கோ, விடுதலை சிறுத்தைகளுக்கோ அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதனால் அவர்களும் எதிர்க்கட்சிகள்தான். பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களால் போலீஸார் உட்படபலரும் தற்கொலை செய்துள்ளனர். இதை தடுக்க மாநில அரசு உடனேநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு தமிழக அரசு செவிசாய்க்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in