

தூத்துக்குடி: மது போதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 இளைஞர்கள் சரக்கு ரயில் மோதி உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த ச.மாரிமுத்து (23), பசும்பொன் நகரை சேர்ந்த கா.மாரிமுத்து(23), திருநெல்வேலி மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த ஜெபசிங்(27) ஆகிய 3 பேரும் நண்பர்கள். தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் கடந்த 9-ம் தேதிநடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், இரவு 10 மணி அளவில் தூத்துக்குடி 3-வது மைல் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து3 பேரும் மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், ஜெபசிங் நீள வாக்கிலும், மற்ற இருவரும் குறுக்குவாக்கிலுமாக தண்டவாளத்திலேயே படுத்து தூங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்துசரக்கு ஏற்றிக்கொண்டு ஆந்திரமாநிலத்துக்கு சென்ற சரக்குரயில் அவர்கள் மீது ஏறியது.இதில் ச.மாரிமுத்து, கா.மாரிமுத்து ஆகிய இருவரும் தலைதுண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஜெபசிங், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி சிப்காட், தென்பாகம் காவல் நிலையங்களில் 3 பேர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.