

திருச்சி: மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வெற்றி கேள்விக்குறியாகிவிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்திய அரசியல் தற்போதுபெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் கூட்டுசேர்ந்து, நாட்டின் அரசியலமைப்புசட்டத்தை திருத்தி அமைக்க முயற்சிக்கின்றன.
சமீபத்தில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து தெரிவித்த கருத்துக்கு பல்வேறு நாடுகளில் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தியா குடியரசு நாடாக தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் மதச்சார்பற்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். ரூபாய் மதிப்பு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.
இது நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்திருப்பதைக் காட்டுகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. மதச்சார்பற்ற, இந்திய குடியரசு மீது நம்பிக்கை கொண்டவர்தான், வேட்பாளராக வரவேண்டும்.
நாட்டில், பாஜகவுக்கு எதிராக உள்ள மாநிலக்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வெற்றி கேள்விக்குறியாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மாநிலச் செயலாளர்முத்தரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.