Published : 11 Jun 2022 07:08 AM
Last Updated : 11 Jun 2022 07:08 AM

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம்: பாரிவேந்தர் எம்பி வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீப காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் அதிகளவில் தங்கள் பொருளாதாரத்தை இழக்கின்றனர். தற்கொலை, கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தகவல், தொழில்நுட்ப ஆவண காப்பக அமைப்பு தெரிவிக்கின்றது.

கரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை முற்றாக ஒழித்து சைபர் குற்றங்களுக்கு எதிராக கடுமையான தேச குற்ற சட்டத்தை இயற்ற வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன மென்பொருளை செயலிழக்கச் செய்ய, எதிர் மென்பொருளை உருவாக்கி இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்கள் இல்லாத நிலையை விரைந்து உருவாக்க வேண்டும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி ஆட்டத்தால் ஏற்படும் விளைவுகளைக் கண்டறியவும் பாதிப்புகளை ஆராயவும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம்.

தகுந்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் காலதாமதமின்றி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, அவசர சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பாரிவேந்தர் எம்பி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x