

சென்னை: சுதந்திரம் பெற்ற 100-வது ஆண்டான 2047-ம் ஆண்டில் உலகிலேயே பலம் வாய்ந்த நாடாக இந்தியா மாறும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி குழுமத்தின் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC) 58-வது நிறுவன தின விழா சென்னை தரமணியில் உள்ள அதன் மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: அரசுக் கட்டமைப்புகள் உறுதியானதாக இருக்க சிஎஸ்ஐஆர் நிறுவனம் உதவிவருகிறது.
அறிவியலுக்கு எல்லைகளே கிடையாது. எனவே, ஆய்வாளர்கள் தங்கள் சூழலை புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.
2014-ம் ஆண்டுக்குபின் நாம் தேசத்தை பார்க்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. தற்போது தேசமானது பன்முகத்தன்மை கொண்டதாக பார்க்கப்படவில்லை. ஒரே நாடாகவே பார்க்கப்படுகிறது. எல்லாருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அதனால் முதலில் திட்டக்குழு கலைக்கப்பட்டது. இந்த 5 ஆண்டு திட்டத்தில் ஒரு பகுதி பயனடையும்போது மற்றொரு பகுதி பலன் பெறாமல் இருந்தது. அந்நிலை தற்போது மாறியுள்ளது.
நாம் சுதந்திரம் பெற்ற 100-வது ஆண்டான 2047-ம் ஆண்டில் உலகிலேயே பலம் வாய்ந்த நாடாக இந்தியா மாறும். அதற்கான பணிகளை அரசு மேற்கொண்டாலும் நாம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும்.
நம்நாடு பல்வேறு துறைகளிலும் நல்ல வளர்ச்சியை சந்தித்து வருகிறது. 2014-ம் ஆண்டு வரை நாட்டில் 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டிவிட்டன.
இளைஞர்கள் வளருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் நிலநடுக்கம் அதிகம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளாகும். அங்குள்ளவர்கள் தங்கள் வீட்டை இழந்தால் மீண்டும் அவற்றை கட்டுவதற்கு மிகவும் செலவாகும். இது சார்ந்த மாற்று ஏற்பாடுகளை ஆய்வாளர்கள் முன்வைக்க வேண்டும்.
இதேபோல், நம்நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டறிவது அவசியமாகும். ஒரு அரசை தாண்டி அறிஞர்கள் யோசித்து சமூகத்துக்கு பங்காற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் சிஎஸ்ஐஆர் ஆய்வு மையத்தின் இயக்குநர் ஆனந்தவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.