

புதுச்சேரி: நகராட்சிக்கு சொந்தமாக உள்ள இடத்திலுள்ள பாப்ஸ்கோ கிடங்கில் துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் திறந்து பார்த்தபோது பல டன் அரிசி மக்கி வீணானது தெரிய வந்தது.
புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான பாப்ஸ்கோ அங்காடி உள்ளது.
அதை குடோனாக பாப் ஸ்கோ அதிகாரிகள் செயல் படுத்துகிறார்கள்.
அங்கு கீழ் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில், துர்நாற்றம் வீசத்தொடங்கியது. அதையடுத்து தொகுதி எம்எல்ஏ சம்பத்திடம் அப்பகுதியினர் தெரிவித்தனர். அவரும், எதிர்க்கட்சித்தலைவர் சிவாவும் அங்கு வந்து, பாப்ஸ்கோ குடோனை திறந்து பார்த்தனர்.
இரண்டு அறைகளிலும் நூற்றுக் கணக்கான அரிசி மூட்டைகள் மக்கி புழு பூத்து துர்நாற்றம் வீசியது. அவை முற்றிலும் வீணாகிப் போயிருந்தது.
மொத்தம் 30 டன் வரை அரிசி வீணாகியிருந்தது தெரிய வந்தது.
இதுபற்றி எதிர்க்கட்சித்தலைவர் சிவா கூறுகையில், "பாப்ஸ்கோ நிறுவனமானது அரசு துறைக்கு சொந்தமான வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகராட்சி இடங்களில் பொருட்களை போட்டு மூடி வாடகையும் தராமல் உள்ளனர்.
பாப்ஸ்கோ நிறுவனம் வாடகை தராமல் உள்ளதால் நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியாத நிலை உள்ளது. அரிசி மூட்டைகளை இங்கு ஏன் வைத்தார்கள்? - ஏன் விநியோகம் செய்யவில்லை? என்ற கேள்வி உள்ளது.
அரிசிக்கு பணம் தந்தது பாப்ஸ்கோவா, குடிமைப் பொருள் வழங்கல்துறையா என்பதும் தெரியவில்லை. நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வைத் துள்ளது ஏன் என்பதும் தெரியவில்லை.
மக்களுக்கு தரவேண்டிய அரிசியை கணக்கு காட்டாமல் வைத்துள்ளார்களா என்ற விவரங்கள் அதிகாரிகளிடம் இருந்து இதுவரையில் கிடைக் கவில்லை" என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரேஷனில் அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள சூழலில், மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரிசி இப்படி முற்றிலும் வீணாகிப் போயுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.